இந்தியா எகிப்து இடையே இராணுவ ஒத்துழைப்பு.. தளவாட உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு..

இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் இராணுவ மற்றும் கடல்சார் பாதுகாப்பில் ஆழமான ஒத்துழைப்பை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. தேஜஸ் போர் விமானத்திற்கான உற்பத்தி ஆலையை எகிப்தில் அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் போர் பயிற்சியில் பங்கேற்க இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எகிப்தின் மேற்கு விமான தளத்தை அடைந்தன. இந்த பயிற்சி ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் மூன்று Su-30 MKI போர் விமானங்கள் மற்றும் இரண்டு C-17 போக்குவரத்து விமானங்கள சென்றடைந்தன.

இந்த பயிற்சியின் நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துதல் ஆகும். முதல் இரண்டு வாரங்களில் எகிப்தின் F-16, MiG-29 மற்றும் ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்த பயிற்சி இரவு மற்றும் பகலிலும் நடத்தப்பட்டன. இந்த போர் பயிற்சியில் வானிலிருந்து தரை, வானிலிருந்து வான் மற்றும் தேடல் மற்றும் மீட்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

மேலும் மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் தனது பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்க எகிப்து ஒரு முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் எகிப்து விமானப்படை தளபதி மஹ்மூத் ஃபோஅத் அப்துல் எல்-கவாட் தலைமையிலான எகிப்திய விமானப்படையின் பிரதிநிதிகள் குழு ஒன்று டெல்லி வந்தனர். அவர்கள் இந்திய ஆயுத படைகளுடன் எதிர்கால ஈடுபாடுகளை பற்றி விவாதித்தனர் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் மற்றம் தளங்களின் இறக்குமதிக்காக இந்திய பாதுகாப்புத்துறையுடன் சாத்திய கூறுகளை ஆராய்ந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் எகிப்திய விமானப்படையின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முகமது அப்பாஸ் ஹெய்மி, டெல்லியில் இந்திய கடற்படையின் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாரை சந்தித்தார். இரு தரப்புக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இருவரும் கவனம் செலுத்தினர் மற்றும புதிய வழிகளை ஆராய ஒப்புக்கொண்டனர். கடந்த மாதம் INS கொச்சி போர்கப்பல் எகிப்தில் உள்ள போர்ட் சஃபாகாவுக்கு சென்றது. ஜூன் 30 அன்று எகிப்து போர்கப்பலான ENS அல் ஜுபைர் மற்றும் ENS அபு உபாதா ஆகியவற்றுடன் கடல்சார் பயிற்சியில் பங்கேற்றது.

மேலும் இருநாடுகளும் விண்வெளி பாதுகாப்பு ஒத்துழைப்பு, மருந்துகள், கோதுமை ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தறைகளில் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் இந்தியா கோவிட்-19 தடுப்பூசிகளை எகிப்துக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதும், எகிப்துக்கு தொடர்ந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. கோதுமைக்கு எகிப்து, ரஷ்யா மற்றும் உக்ரைனை நம்பி இருந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் மோதலால் கோதுமை தடைப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல் சிசி இந்தியாவிற்கு வருகை தந்தார். பிரதமர் மோடி உடனான சந்திப்பின் முடிவில், கடல் போக்குவரத்து தொடர்பான முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புகொண்டனர். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது, தகவல் மற்றும் செயல்பாட்டு பரிமாற்றங்களை அதிகரிப்பது, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு இந்தியாவின் INS டாபர் மற்றும் எகிப்தின் அலெக்ஸ்சான்ட்ரா ஆகியவை கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டன. எகிப்து நாடானது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவை இணைக்கும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. மேலும் செங்கடல் வழியாக சூயஸ் கால்வாய் மூலம் மத்திய தரைக்கடல் பகுதியை இணைக்கும் முக்கிய இடமாகவும் உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் எகிப்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.