பீரங்கிகளை தாக்கி அழிக்கும் மிலன்-2T ஏவுகணையை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டம்..
இந்திய இராணுவத்தின் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிக்க பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் 1,188 கோடி ரூபாய் மதிப்பில் 4,960 மிலன்-2T டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உற்பத்தி செய்ய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனை தரை மற்றும் வாகனத்தில் இருந்து செலுத்தலாம். இதன் தாக்குதல் தூரம் 1,850 மீட்டர் ஆகும். இந்த ஏவுகணை நிலையான மற்றும் நகரும் இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது. இந்த திட்டம் ஏற்கனவே பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் மார்ச் 8, 2016 ஆண்டு கையெழுத்தானது.
இப்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மிலன்-2T எதிர்ப்பு ஏவுகணையானது பிரான்சின் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒன்றிடம் இருந்து உரிமம் பெற்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
இந்த பிரங்கி எதிர்ப்பு ஏவுகணையை மூன்று ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இந்திய இராணுவத்தில் இணைக்கப்படும் போது, நமது இராணுவத்தின் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.