இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க உள்ள மலேசியா.. இந்தியா வரும் மலேசிய குழு..

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போர் விமானம் மலேசியாவின் சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளதாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.மாதவன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவின் JF-17, தென்கொரியாவின் FA-30 மற்றும் ரஷ்யாவின் Mig-35 மற்றும் Yak-130 ஆகியவற்றுடன் கடுமையான போட்டி இருந்தபோதிலும் இந்தியாவின் தேஜஸ் விமானம் முன்னிலையில் உள்ளதாக மாதவன் தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியா இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை வாங்கினால், அதன் ரஷ்ய வம்சாவளியை சேர்ந்த Su-30 போர் விமானத்திற்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு வசதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் நடைபெற்று வருவதால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது விமானத்திற்கு மலேசியாவால் பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சுகோய் விமான பராமரிப்பு மையங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற வசதிகள் சீனாவிடம் கிடையாது. கொள்முதல் செயல்முறையை முன்னெடுத்து செல்ல உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு விரையில் இந்தியா வர உள்ளது.

ரஷ்யாவின் மிக்-29 போர் விமானங்களுக்கு மாற்றாக மலேசியா புதிய விமானங்களை வாங்க உள்ளது. ஆனால் மலேசியா வாங்க உள்ள விமானங்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு HAL நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 48,000 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்தது.

இதுதவிர HAL நிறுவனம் 5 பில்லியன் டாலர் மதிப்பில், தேஜஸ் MK2 மற்றும் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தை (AMCA) உருவாக்குவதற்கான திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் விமானத்தை வாங்க இருக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நல்ல சமிக்ஞையை கொடுக்கும் என மாதவன் தெரிவித்துளளார்.

Leave a Reply

Your email address will not be published.