மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி பெயர்.. மொரீஷியஸ் பிரதமர் அறிவிப்பு.. சீனாவிற்கு முட்டுக்கட்டை..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் ஆகியோர் மொரீஷியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை கூட்டாக தொடங்கி வைத்தனர். இது தவிர மொரீஷியஸ் சிவில் கல்லூரி மற்றும் 8 மெகாவாட் சோலார் பிவி பண்ணை திட்டத்திற்காக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினர்.

மொரீஷியஸில் மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம், சுப்ரிம் கோர்ட கட்டிடம், ENT மருத்துவமனை, ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு டிஜிட்டல் டேப்லெட்டுகள் மற்றும் சமூக வீட்டு வசதி திட்டம் ஆகியவற்றிற்காக மத்திய அரசு சிறப்பு பொருளாதார தொகுப்பாக 353 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியது.

மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டத்திற்கு இந்தியா அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒன்றிற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படும் என மொரீஷியஸ் பிரதமர் கூறியுள்ளார். இந்திய அரசுக்கும் மொரீஷியஸ் அரசுக்கும் இடையே சிறிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்திய மானிய உதவி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் கல்வி, அடிப்படை சுகாதார பாதுகாப்பு, சமூக மேம்பாட்டு துறையில் உள்கட்டமைப்பை உருவாக்குதல், வாழ்வாதார செயல்பாடு, திறன் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துதல் மற்றும் பேரிடர் அபாயத்தை குறைத்தல் போன்ற திட்டங்களின் முக்கிய அம்சமாகும்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இந்தியா 527 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது. 26 கிலோமீட்டர் கொண்ட இந்த மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. போர்ட் லூயிஸ் மற்றும் ரோஸ் ஹில் இடையே முதல் கட்டம் முடிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு இந்திய மொரீஷியஸ் பிரதமர்கள் இணைந்து துவக்கி வைத்தனர்.

ரோஸ் ஹில் மற்றும் குரேப்பை இணைக்கும் இரண்டாவது கட்டம் இந்த வருட இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. மேலும் சிவில் சர்வீஸ் கல்லூரி திட்டத்திற்கு 2017 ஆம் ஆண்டு இந்தியா 4.74 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியுள்ளது.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள சோலார் பிவி பார்ம் திட்டமானது 25,000 பிவி செல்களை நிறுவி ஆண்டுதோறும் 14 ஜிகாவாட் பசுமை ஆற்றலை உருவாக்கும். இதன் மூலம் சுமார் 10,000 மொரீஷியஸ் குடும்பங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, இன்று நமது வலுவான வளர்ச்சி கூட்டாண்மை நமது நெருங்கிய உறவுகளின் முக்கிய தூணாக மாறியுள்ளது. நமது கூட்டாளிகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் மற்றும் அவர்களின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வளர்ச்சி கூட்டாண்மைக்கான இந்தியாவின் அணுகுமுறைக்கு மொரீஷியஸ் ஒரு சிறந்த உதாரணம் என பிரதமர் மோடி கூறினார்.

கென்யா, ஈவோடரியல் கினியா, டிஜிபோட்டி போன்ற ஆப்ரிக்க நாடுகளில் சீனா கால்பதித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான இந்த நெருக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.