S-400 ஏவுகணை அமைப்பை சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிலைநிறுத்தும் பணி துவக்கம்..?

இந்திய விமானப்படை S-400 Triumf ஏவுகணை அமைப்பினை பஞ்சாபில் உள்ள விமான தளத்தில் நிலை நிறுத்துவதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்த இன்னும் குறைந்தது ஆறு வாரங்கள் ஆகும் என விமானப்படை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட S-400 ஏவுகணை அமைப்பு கடந்த மாதம் முதல் இந்தியாவுக்கு வர தொடங்கியது. இந்த நிலையில் ஏவுகணை அமைப்பின் முதஒ படைப்பிரிவை சீனாவின் வடக்கு பகுதி மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லை பகுதியை உள்ளடக்கும் வகையில் நிலைநிறுத்தப்படுகிறது.

S-400 ஏவுகணை அமைப்பின் பல்வேறு முக்கிய கூறுகள் மற்றும் புற உபகரணங்களை நிலைநிறுத்தப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு தேவைகளுக்காக 5 S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்க 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணை அமைப்பை வாங்கினால் இந்தியா மீது தடை விதிக்கப்படும் என அப்போதைய ட்ரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதனையும் மீறி இந்தியா 2018 ஆம் ஆண்டு S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Also Reada: DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்தை உருவாக்கி வரும் HAL..

2017 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு கொண்டுவந்த CAATSA சட்டம் ஆனது, ரஷ்ய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது. இந்த CAATSA சட்டத்தின் அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது. தற்போது அதேபோல் இந்தியாவின் மீது தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

Also Read: 5ஆம் தலைமுறை தேஜஸ் MK 2 போர் விமானத்திற்கு ஆர்டர் கொடுத்த இந்திய விமானப்படை?

இருப்பினும் S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்காக இந்தியா மீது CAATSA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதை பிடன் நிர்வாகம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதற்கிடையில் S-400 ஏவுகணைகளை இயக்குவதற்கான பயற்சிகள் இந்திய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ரஷ்ய உயர் அதிகாரி வியாசஸ்லாவ் டிஜிர்கால்ன் கூறுகையில் S-400 ஏவுகணை அமைப்பை இயக்குவதற்கு போதுமான எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என கூறினார்.

Also Read: இந்தியாவின் ரபேல் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10C போர் விமானத்தை வாங்கும் பாகிஸ்தான்..?

Leave a Reply

Your email address will not be published.