காளி போஸ்டர் சர்ச்சை: மன்னிப்பு கேட்டது டொரான்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம்..
டொராண்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் தனது பெயரை காளி படத்துடன் இணைத்ததற்காகவும், லீனா மணிமேகலை தனது படத்தை விளம்பரப்படுத்த உருவாக்கிய காளி புகைப்பிடிக்கும் சுவரொட்டிக்காகவும் மன்னிப்பு கேட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் காளி திரைப்படம். ஆகா கான் அருங்காட்சியகத்தில் அண்டர் தி டென்ட் திட்டத்தின் கீழ் திரையிடப்பட இருந்தது. இதனை டொராண்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிலையில் காளி போஸ்டருக்கு இந்தக்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியதால் பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஆகா கான் அருங்காட்சியகம் காளி போஸ்டர் படத்திற்கான மன்னிப்பு கேட்டது. மேலும் திரைப்படம் தங்கள் அருங்காட்சியத்தில் திரையிடப்படாது எனவும் கூறியது. இந்த நிலையில் டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தர் முகமது லச்செமி தனது அறிக்கையில், இது ஒரு டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம் (TMU) நிகழ்வாக இருந்தபோதும், நாங்கள் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்கிறோம். சர்ச்சைக்குரிய மாணவர் டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக மாணவர் அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் அவரின் போஸ்டர் பல்கலைக்கழகத்தால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்வை நடத்திய டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக துறை, சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதியளித்துள்ளது.
மேலும் சிக்கலான தலைப்புகளை மிகவும் உணர்திறனுடன் ஆராய வேண்டியதன் அவசியத்தை ஒப்புகொள்கிறோம். எங்களின் கவனக்குறைவுக்காகவும், இதனால் ஏற்பட்ட வருத்தம் மற்றும் ஏமாற்றத்திற்காகவும் பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்க விரும்புகிறது. பல்கலைக்கழகம் கல்வி சுதந்திரம், சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படை கொள்கைகளை ஆதரிக்கிறது.
எவ்வாறாயினும், இது பரஸ்பர மரியாதைக்குரிய சூழலில் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மதிக்கும் ஒரு கல்வி நிறுவனமாக, நாம் சிறப்பாக செய்ய முடியும் மற்றும் செய்ய வேண்டும். மேலும் இது போன்ற முக்கியமான பிரச்சனைகளில் உரையாடல் மற்றும் கல்வியை தொடர்ந்து ஊக்குவிப்போம் என முகமது லச்செமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.