அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன்! ட்ரம்ப் நிறுத்தி வைத்த திட்டத்தை மீண்டும் தொடங்க கையெழுத்து
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும், முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவி ஏற்று கொண்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து, வாஷிங்டனில் உள்ள வெள்ளைமாளிகை வளாகத்தில் புதிய அதிபர் பதவி ஏற்கும் விழா நடைப்பெற்றது.
இதையடுத்து, துணை அதிபராக கமலா ஹாரிஸ்க்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோர் தங்கள் மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை, துணை அதிபராக இருந்த பென்ஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1,000 பேர் மட்டுமே நிகழ்ச்சியை காண அனுமதி வழங்கப்பட்டது.
பதவி ஏற்று கொண்ட ஜோ பைடன், மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா, குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் மசோதா, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான மசோதா உள்ளிட்ட 15 மசோதாக்களில் முதல் நாளில் கையெழுத்திட்டுள்ளார் புதிய அதிபர் ஜோ பைடன்.