இஸ்ரோவின் வரவிருக்கும் ஐந்து மிகப்பெரிய விண்வெளி திட்டங்கள்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பெரிய அளவில் செயற்கைகோள்களை செலுத்தாத நிலையில், தற்போது வரவிருக்கும் ஆண்டுகளில் பல்வேறு செயற்கை கோள்களை விண்ணில் ஏவவுள்ளது.

இஸ்ரோ இரண்டு வகைகளில் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. ஒன்று இந்தியாவின் சொந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மற்றொன்று தனியார் நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வணிக ரீதியில் செயற்கைக்கோள்ககை விண்ணில் செலுத்தி வருகிறது. வணிக ரீதியில் செலுத்துவதால் இஸ்ரோவிற்கு வருவாய் கிடைக்கிறது.

சொந்த தேவை என்பது, வழிச்செலுத்தல், தொலைத்தொடர்பு, மூலோபாய பயன்பாடு மற்றும் புவி கண்காணிப்பு உள்ளிட்ட வழக்கமான நோக்கங்கள் மட்டும் அல்லாமல், தேசிய பணிகள் விண்வெளி ஆய்வு மற்றும் கிரகங்களுக்கு இடையேயான அறிவியல் ஆய்வு நோக்கத்திற்காகவும் இஸ்ரோ செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் நாடாளுமன்றத்தில் கூறுகையில், இந்தியா 2025 ஆம் ஆண்டிற்குள் ஐந்து அறிவியல் தொடர்பான செயற்கைக்கோள்களை செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஆதித்யா எல் 1, 378 கோடி செலவில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும், சந்திரயான் 3 250 கோடி செலவில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் செலுத்தப்பட உள்ளது.

மேலும் XPoSAT 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலும், ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை 124 கோடி செலவில் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலும், ககன்யான் அபார்ட் டெமான்ஸ்ட்ரேஷன் 9000 கோடி செலவில் 2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல் 1 என்பது சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பான அறிவியலை ஆராய்வதற்கும் செலுத்தப்பட் உள்ள செயற்கைக்கோளாகும். சந்திரயான்-3 என்பது மூன்றாவது சந்திர மிஷன் மற்றும் நாட்டின் இரண்டாவது சந்திரனில் ஆர்பிடர் தரையிறக்கும் முயற்சியாகும். XPoSAT என்பது விண்வெளியில் எக்ஸ்-கதிர்களின் துருவமுனை பகுதியை ஆய்வு செய்வதாகும்.

ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை என்பது இரண்டு வெவ்வேறு செயற்கைக்கோள்களை ஏவுவதையும், சுற்றுப்பாதையில் இருக்கும்போது அவை ஒரே அலகாக இணைக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்வதையும் உள்ளடக்கிய திட்டமாகும். அதாவது இந்த திட்டமானது, செயற்கைக்கோள்களின் விண்வெளி எரிபொருள் நிரப்புதல், ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், விண்வெளி வீரர்களை ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு மாற்றுதல் போன்றவை ஆகும்.

ககன்யான் என்பது இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாக கொண்டதாகும். ககன்யானை நிறைவேற்ற இஸ்ரோ அதன் சரக்கு-கேரியர் GSLV MK3 ராக்கெட் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. க்ரூ எஸ்கேப் சோதனைகள் இந்த ஆண்டும், 2023 நடுப்பகுதியில் முதல் ஆளில்லா பணி மற்றும் அதனை தொடர்ந்து இரண்டு தப்பிக்கும் சோதனைகள் மற்றும் மற்றொரு ஆளில்லா சோதனை முடிவடைந்த பிறகு 2024 ஆம் ஆண்டில் வீரர்கள் விண்ணிற்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.