அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருந்து இஸ்லாமிய பாடநூல் அகற்றம்.. சனாதன தர்மம் சேர்ப்பு..

இஸ்லாமிய ஆய்வு துறையின் பாடத்திட்டத்தில் இருந்து 20 நூற்றாண்டின் இஸ்லாமிய எழுத்தாளரான அபுல் அலா அல்-மௌதூதி மற்றும் சயீத் குதுப் ஆகியோர் குறித்த பாடநூல்களை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. மேலும் சனாதன தர்மம் குறித்த பாடநூல் இணைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இரண்டு இஸ்லாமிய ஆசிரியர்களின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது குறித்து 20 கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் புகார் அளித்தனர். அவர்கள் கடிதத்தில் இந்த புத்தகங்களின் உள்ளடக்கம் தீவிர இஸ்லாமிய அரசை ஆதரிப்பதால் இந்த புத்தகங்களை தடை செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.

இஸ்லாமிய ஆய்வுகள் துறை தலைவர் முகமது இஸ்மாயில் கூறுகையில், சர்ச்சைக்குரிய இரண்டு இஸ்லாமிய ஆசிரியர்களின் பாடநூல் நீக்கப்படும். இஸ்லாமிய படிப்பை போலவே சனாதன தர்மம் மற்றும் பிற மதங்கள் பற்றிய தரமான கல்வியை வழங்க விரும்புவதாக இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பாடத்திட்டத்தில் வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள், ராமாயணம், பகவத்கீதை மற்றும் சனாதன தர்மம் தொடர்பான பிற நூல்கள் பற்றிய பாடங்கள் மற்றும் பௌத்தம், சமணம், சீக்கியம் மற்றும் பிற மதங்களின் போதனைகளும் பாடத்திட்டத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

நீக்கப்பட்ட பாடநூல்களில் ஒன்று அபுல் அலா அல்-மௌதுதி (1903-1979) இவர் ஒரு இந்திய இஸ்லாமியர் ஆவார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து விட்டார். அவர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அமைப்பை நிறுவினார். அவர் 1926 ஆம் ஆண்டு தியோபந்த் செமினரியில் பட்டம் பெற்றார். அவரது முக்கிய படைப்புகளில் தஃபிம்-உல்-குரான் ஒன்றாகும்.

மற்றொரு நீக்கப்பட்ட பாடநூல் எகிப்திய எழுத்தாளர் சையத் குதுப் (1906-1966) பற்றியதாகும். இவர் 1950 மற்றும் 1960 களில் முஸ்லிம் சகோதரத்துவத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெயர்போன இவர், எகிப்தின் ஜனாதிபதி கமல் அப்துல் நாசரை எதிர்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் குதுப் குரான் மற்றும் இஸ்லாத்தில் சமூக நீதி போன்ற பல டஜன் புத்தகங்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர் இஸ்மாயில் கூறுகையில், இந்த துறை 1948 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஈரான், தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இங்கு ஆராய்ச்சியை தொடர்கின்றனர்.

இத்துறையில் 70,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம் உள்ளது. இந்த இரண்டு இஸ்லாமிய ஆசிரியர்களின் புத்தகங்களை சேர்ப்பதற்கு எதிர்ப்பு உள்ளது. தேவையற்ற சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே பாடத்திட்டத்தில் இருந்து அவற்றை நீக்க முடிவு செய்துள்ளோம். இன்னும் 2 வாரத்திற்குள் நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவை ஆய்வு வாரியம் முறையாக அங்கீகரிக்கும் என இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.