சீனாவில் இஸ்லாம் கம்யூனிஸ்ட் கொள்கைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்- அதிபர் ஜி ஜின்பிங்

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றி வரும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப நாட்டில் உள்ள மதங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், சீனாவில் இஸ்லாம் சீனாவிற்கு ஏற்றவாறு மாறுபட்ட நிலையில் இருக்க வேண்டும் எனவும் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 12 ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் நான்கு நாட்கள் பயணமாக ஜின்ஜியாங் பகுதிக்கு சென்றார். ஜின்ஜியாங் மாகாணத்தில் பல மில்லியன் கணக்கான உய்கூர் இஸ்லாமியர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த பயணத்தின் போது உயர் அதிகாரிகளை அதிபர் சந்தித்தார்.

அப்போது சீன தேசத்திற்கான வலுவான சமூக உணர்வை வளர்ப்பது, வெவ்வேறு இனக்குழுக்களிடையே பரிமாற்றங்கள், தொடர்புகள் மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதை அதிபர் வலியுறுத்தியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மத விவகாரங்களின் நிர்வாக திறனை மேம்படுத்தி மதங்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உணர வேண்டியதன் அவசியத்தை ஜி அடிக்கோடிட்டு காட்டினார்.

சீனாவில் இஸ்லாம் நோக்குநிலையில் சீனமாக இருக்க வேண்டும் மற்றும் நாட்டில் உள்ள மதங்கள் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்படும் சோசலிச சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என கொள்கையை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கி விடுமாறு அதிபர் அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

கலாச்சார அடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தாய்நாடு, சீன தேசம், சீன கலாச்சாரம், சீன கம்யூனிஸ்ட கட்சி மற்றும் சீன குணாதிசயங்களை கொண்ட சோசலிசம் ஆகியவற்றுடன் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்த அனைத்து இன மக்களையும் பயிற்றுவிக்கவும் வழிகாட்டவும் அதிபர் அழைப்பு விடுத்தார்.

உய்கூர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து வைத்து சீனா இனப்படுகொலை செய்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டும் நிலையில், அவர்களுக்கு முகாம்களில் கல்வி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக கூறியுள்ளது. சமீபத்தில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் மிச்செல் பச்செலெட் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சென்றார்.

ஜின்ஜியாங்கில் சீனாவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் நடவடிக்கைகளை பயன்படுத்துவது குறித்து கவலைகளை எழுப்பினார். அதேபோல் திபெத் பிராந்தியத்திலும் பல திபெத் ஆண்கள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சீன கொள்கை மற்றும் கலாச்சாரம் பற்றி பயிற்சி அளிப்பதாகவும், பெண்களுக்கும் சீன மொழி பயிற்றுவிப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.