ரஷ்யா உக்ரைன் போருக்கு உண்மையான காரணம் இதுதானா..? வெளிவரும் உண்மை..!
ரஷ்யா உக்ரைன் போரானது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போர் அல்லது திணிக்கப்பட்ட போர் என அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான பானு கோம்ஸ் தெரிவித்துள்ளார்.
பானு கோம்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், நேட்டோ அமைப்பில் அமெரிக்கா தான் ஆதிக்கம் செலுத்தும் பெரும் தலைமை என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்த நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினராக்குவதால் ரஷ்யாவிற்கு எழும் பாதுகாப்பு நெருக்கடியால் உருவாகி நடக்கும் போர் தான் ரஷ்யா, உக்ரைன் இடையில் நடக்கும் போர் என சொல்லப்படுகிறது.
அவ்வாறு சொல்லப்பட்டாலும் உலகில் நடக்கும் புவி அரசியலிலும், வர்த்தக அரசியலிலும் ஆதிக்கத்தை மாற்றி அமைக்கும் அரசியலிலும் சொல்லப்படுபவை மட்டுமே உண்மை அல்ல. 2008ல் நடந்த கூட்டத்தில் உக்ரைன் உட்பட 4 நாடுகளை நேட்டோவில் உறுப்பினராக்கலாம் என பேசப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராகிறார் செலன்ஸ்கி. உக்ரைன் கெஜ்ரிவால் என்றழைக்கப்படும் இவர் நேட்டோவில் உக்ரைனை இணைக்க பெரிதும் ஆர்வம் கொண்டவர். 2021 ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க அதிபராகிறார். 2021 ஜூன் மாதம் பெல்ஜியத்தில் நடந்த நேட்டோ கூட்டத்தில் உக்ரைனை உறுப்பினராக்கும் முடிவு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு உக்ரைனின் அதிபரால் வரவேற்கப்பட்டு ஏற்று கொள்ளப்படுகிறது.
இதனால் ரஷ்ய எல்லையில் நேட்டோ படைகள் குவிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. 2019 முதல் 2021 வரை வந்த செய்திகளில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடக்கும் நிலையை மாற்றி டாலரின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை நோக்கி முயற்சிகளை எடுக்கின்றன என்ற செய்திகள் வெளியாகின.
இதற்கான முன் தயாரிப்பாக 2012 ஆம் ஆண்டு SWIFT அமைப்பில் உறுப்பினரான ரஷ்யா 2014 ல் ரஷ்யாவிற்கு என தனியான SPFS என்ற நாடுகளுக்கு இடையிலான பணபரிமாற்றத்திற்கான தகவல் அமைப்பை உருவாக்கிவிட்டது. 2015ல் சீனாவும் தனக்கென CIPS என்ற நாடுகளுக்கு இடையிலான பண பரிமாற்றத்திற்கான தகவல் அமைப்பை உருவாக்கிவிட்டது. தற்போது SWIFT எனப்படும் நாடுகளுக்கு இடையிலான பண பரிவர்த்தனைக்கான தகவல் பரிமாற்ற அமைப்பிலிருந்து ரஷ்யாவை நீக்கினாலும் ரஷ்யாவிற்கு பாதிப்பு இருக்காது என்பதே உண்மை நிலை.
இதனை மேலும் உறுதி செய்யும் விதமாக உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன் பிப்ரவரி 4 ஆம் தேதி சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்குள் எந்த வித நிபந்தனைகளுமற்ற பரஸ்பர ஆதரவு என்பதாக முடிவு செய்து கொள்கின்றன. இதே காலகட்டத்தில் பல்வேறு கிரிப்டோ கரன்சிகள் பெரும் வேகமெடுத்தன. நாடுகள் அவரவருக்கென்று கிரிப்டோ கரன்சியை உருவாக்கும் முனைப்பும் வேகமெடுத்தது. கிரிப்டோ கரன்ஸி எனும் அரக்கனை எந்த ஒழுங்குமுறையும் கட்டுப்படுத்த இயலாது என்பதே நிலை. அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது மெட்டாவெர்ஸ் எனும் இணை அரக்கன்.
வழக்கமான உலக புரட்சியாளர்கள் அனைவரும் அவர்களின் வழக்கமான பாணியில் உரத்த குரலில் ஒருங்கிணைந்து போரின் கொடுமைகளை பேசாமல், என்ன இருந்தாலும் போர் என்கிற முடிவை புடின் எடுத்திருக்கக்கூடாது என்று திட்டவட்டமாக புதினை கண்டிக்காமல் அடக்கிவாசிப்பதும் கவனிக்கத்தக்கது. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சி மட்டுமே என்றால் பரவாயில்லை. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் சீனா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்க பார்க்கும் மாற்று ஆதிக்க நிலை உலகத்தின் தன்மையை புரட்டி போடக்கூடியது.
இந்தியாவை பொறுத்தவரையில் பிராந்தியத்தில் சீனா என்கிற அடக்குமுறை வல்லரசுவை எதிர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அமெரிக்கா போன்ற வழுவிழக்காத இன்னொரு உலக வல்லரசு தேவை. வல்லரசுகளுக்குள்ளான போட்டியில் இந்தியா ஆர்பாட்டமின்றி வளர்ந்து கொள்ளலாம் என்பது சவுகரியமானதொரு சமன். ஆனால் அமெரிக்காவை அதன் ஜனநாயகம் தந்த உரிமைகளை கொண்டே ஊடுருவி வலுவிழக்க செய்திருப்பது நடந்திருக்கிறது எனும் இன்றைய நிலையில், இந்தியாவின் போர் குறித்த சார்பற்ற நிலைபாடு அவசியமானது, முக்கியமானது. சூழலுக்கு ஏற்ற வகையில் பொறுத்திருந்து பார்க்கும் நிலையிலானது என பானு கோம்ஸ தெரிவித்துள்ளார்.