இந்தியா வரும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர்.. ஜெய்சங்கர், அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை..

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஞாயிற்றுகிழமை அன்று இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். திங்களன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் பதவி ஏற்ற பிறகு அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும். கடந்த நவம்பர் மாதம் அப்துல்லாஹியன் இந்தியா வருவதாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 30 ஆம் தேதி இந்தியா வரும் அப்துல்லாஹியன் ஜனவரி 31 அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

இந்தியா மற்றும் ஈரான் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்க முன்வந்தது.

இதனை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் உதவியை எடுத்து செல்ல பாகிஸ்தான் டிரக்குகள் மட்டுமே பயன்படுத்த படும் என கூறி கருத்து வேறுபாடு காரணமாக பாகிஸ்தான் அதனை அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் ஈரானின் சபஹார் துறைமுகம் வழியாக உதவிபொருட்களை கொண்டு செல்ல ஈரான் முன்வந்துள்ளது. இந்திய வருகைக்கு முன்னதாக அப்துல்லாஹியன், இந்திய மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் அனைத்து உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றுவோம் என டிவீட் செய்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் நிலைமை, சபஹார் துறைமுக வளர்ச்சி பணி மற்றும் ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அபுதாபியில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நட்த்தி வருகின்றனர்.

இதனால் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் சமநிலையை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அப்துல்லாஹியான் ஞாயிற்றுகிழமை இந்தியா வர உள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிறகு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்திக்கிறார். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஈரானின் பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷம்கானி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தை முடித்து கொண்டு அப்துல்லாஹியான் இலங்கை செல்கிறார். அங்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள எண்ணெய் கட்டணத்திற்கு ஈடாக தேயிலையை ஈரானுக்கு அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.