G7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு?
பிரதமர் மோடி G7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரிட்டன் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. G7 மாநாட்டிற்கு முன்பாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர வாய்ப்பு உள்ளதாக இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.
G7 நாடுகளான பிரிட்டன், கனடா, இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் G7 கூட்டமைப்பில் உள்ளன. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. G7.மாநாடு ஜூன் 11 ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், கொரோனா வைரசை ஒழித்தல், பருவநிலை மாற்றம், திறந்த வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்: பிரதமர் மோடி G7 உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியா மருந்து வழங்கும் முக்கியமான நாடு ஆகும். ஏற்கனவே உலகின் மருந்தகம் என்ற வகையில் கொரோனா தடுப்பு மருந்தில் 50% அளவுக்கு இந்தியா வழங்கியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாநாட்டிற்கு முன்பாகவே இந்தியா வரஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து செயலாற்றியதாக போரிஸ் ஜான்சன் கூறி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்து வளமையான எதிர்காலத்திற்கு ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களிடம் வலியுறுத்த போவதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
26 ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.