சீனாவிற்கு எதிராக ரஷ்யா மற்றும் ஜப்பானுடன் இந்தியா புதிய கூட்டணி..?

இந்தியா சீனாவுக்கு எதிராக ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா என புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ரஷ்யா மற்றும் ஜப்பான் என இரு நாடுகளுமே இந்தியாவுக்கு நட்பு நாடுகள். ஆனால் ஜப்பானும் சீனாவும் எதிரி நாடுகள். அதே சமயம் ரஷ்யா உடனும் தீவு தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளையும் சமாதானப்படுத்த இந்தியா முயன்று வருகிறது. ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் இருப்பதால் ரஷ்யா வர்த்தகத்திற்கு பெரும்பாலும் சீனாவை நம்பியே உள்ளது.

எனவே ஜப்பானுடன் வர்த்தக உறவை மேம்படுத்தினால் ரஷ்யா சீனாவை விட்டு வெளியேறும் என கூறப்படுகிறது. சீனாவை தவிர்த்து ரஷ்யாவுக்கு பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் எல்லை பிரச்சனை தொடர்பாக சீனா, ரஷ்யா இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவிற்கு எதிராக ஒரு முத்தரப்பு பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் நோக்கிலும் இந்தியா இரண்டு நாடுகளுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தைக்கு முயன்று வருகிறது. ஜப்பானுடைய வர்த்தகம் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதால் கிட்டதட்ட 60 நாட்கள் ஆகிறது. இதுவே ரஷ்யாவுடன் சுமூக உறவு ஏற்பட்டால் ரஷ்யா வழியாக செல்லும் போது 25 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்தியா, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான் என சீனாவை சுற்றி ஒரு புதிய வழிதடத்தை உருவாக்க இந்தியா மற்றும் ஜப்பான் முயன்று வருகிறது. இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே மூன்று நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் குரில் தீவு தொடர்பாக ரஷ்யா மற்றும் ஜப்பான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

ரஷ்யாவுடன் மோதல் போக்கு இருந்து வருவதால் ஜப்பான் முதலீட்டார்களும் ரஷ்யாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் குரில் தீவில் ஒரு புதிய வரி விலக்கு மற்றும் சுங்க இலவச மண்டலம் அமைக்க போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் முதலீடு செய்ய ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை ரஷ்யா அழைத்துள்ளது.

ஆனால் ரஷ்யாவுடன் பிரச்சனை இருப்பதால் இரு நாடுகளுக்கும் நண்பர்களாக உள்ள ஒரு மத்தியஸ்த நாடுகளின் உதவியை ஜப்பான் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் இந்தியா இரு நாடுகளுக்கும் நட்பு நாடு என்பதால் மத்தியஸ்தம் செய்ய முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.