இஸ்ரேலிடம் இருந்து 4 ஹெரான் ஆளில்லா வான் விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ள இந்தியா..

இந்திய இராணுவம் தனது அவசர கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக நான்கு ஹெரான் TP நடுத்தர உயர (Medium-altitude, long-endurance Or MALE) ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) இஸ்ரேலிடம் இருந்து குத்தகைக்கு வாங்கியுள்ளது.

எல்லையில் நீண்டகால மோதல்களுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் வெளியேறத் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை 2020 (DAP 2020) இன் விதிகளின் கீழ் இது இரண்டாவது ஒப்பந்தமாகும். முதலாவதாக இதே விதிகளின் கீழ், இந்தியக் கடற்படை, அமெரிக்காவிலிருந்து SeaGuardian MALE UAVகளை ஒப்பந்தம் செய்து இருந்தது.

ஜேன்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தம் 200 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்றும் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க படலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் மோதல் நடந்து கொண்டிருந்த போது ஜனவரி நடுப்பகுதியில் UAV களுக்கான குத்தகை வழங்கப்பட்டது. கடந்த வாரம் தான் இந்தியாவும் சீனாவும் பாங்கோங் சோவின் வடக்கு கரையிலிருந்து வெளியேற முடிவு செய்தபின் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், யாராலும் இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என கூறி இருந்தார்.

நவீனமயமாக்கலின் முக்கியத்துவத்தையும் நடைமுறை சவால்களையும் அடிக்கோடிட்டுக் காட்டிய இராணுவத் தலைமை தளபதி எம்.எம். நாரவனே, DAP 2020 இன் சமீபத்திய மாற்றங்கள் உள்நாட்டு தொழில்துறைக்கு வலுவூட்டுவதற்காக சீரமைக்கப்பட்டுள்ளன என கூறினார்.

இந்த முயற்சிகள் அனைத்தும் பாராட்டத்தக்கவை என்றாலும், இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. கையகப்படுத்தல் செயல்முறைக்கு சில உள்ளார்ந்த நடைமுறை குறைபாடுகள் உள்ளன. அவை முதன்மையாக விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் பூஜ்ஜிய பிழையை உறுதிப்படுத்த முயற்சிக்கும் வழிகாட்டுதல்கள் என்று நரவனே ஒரு கருத்தரங்கில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *