ஆப்பிளின் iOS மற்றும் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக சொந்தமாக OS உருவாக்க உள்ள இந்தியா..?

கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் iOS ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு உள்நாட்டு இயங்குதளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொழில்துறைக்கு சுற்றுச்சூழல் அமைப்பை எளிதாக்கும் கொள்கையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் iOS மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் முயற்சித்தும் பின்வாங்கிவிட்டன. தற்போது கூகுள் மற்றும் ஆப்பிளுக்கு சவால் விடும் வகையில் மத்திய அரசு தனது சொந்த மொபைல் இயங்குதளத்தை உருவாக்க உள்ளது.

நாடாளுமன்றத்தில் மின்னனு மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கான மாற்று இயங்குதளத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் துடிப்பான வடிவமைப்பு மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்தகைய உள்நாட்டு இயங்கு தளத்தை (OS) உருவாக்குவதற்கு அரசாங்கம் இதுவரை நிதி ஒதுக்கவில்லை. செயல்முறை வடிவம் பெற்ற பிறகு நிதி ஒதுக்கிடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பி கார்த்திக் ப சிதம்பரம், இந்த இயங்குதளம் இந்தியாவில் மட்டும் கிடைக்குமா அல்லது உலகம் முழுவதும் கிடைக்குமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், இந்தியாவில் தயாரிக்கப்படும் மென்பொருள் தயாரிப்புகளை மற்ற சந்தைகளில் ஏற்றுமதி மற்றும் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் கொள்கை எதுவும் இல்லை என தெரிவித்தார். இதன் மூலம் இயங்குதளம் உலக அளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Also Read: சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்.. இந்தியா கனடா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை..!

ஸ்டேடிஸ்டாவின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் இந்திய சந்தையில் 95.84 சதவீதத்தை கொண்டுள்ளன. மற்றவை ஆப்பிளின் iOS கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் 5,000 க்கும் குறைவாக ஆண்ட்ராய்டு போன்கள் கிடைக்கின்றன. அதேபோல் சமீபத்திய ஆப்பிள் ஐபோனின் விலை 44,000 ரூபாயிக்கு கிடைக்கிறது.

அதேபோல் கம்ப்யூட்டர் பிரிவில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை உள்ள தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 85.79 சதவீத சந்தையை கொண்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு இயங்குதளத்தை உருவாக்குவதில் தன்னுடன் சேர விரும்பும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அரசாங்கம் தேடிவருகிறது.

Also Read: கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்ய இந்தியாவிற்கு ரஷ்யா அழைப்பு..?

இதற்கு முன்பு ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கு மாற்றாக சாம்சங்கின் Tizen OS மற்றும் மைக்ரோசாப்டின் Windows Phone, பிளாக்பெர்ரி ஆகியவை உருவாக்கப்பட்டன, ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ன் வளர்ச்சியால் அவற்றால் தாக்குபிடிக்க முடியவில்லை. அவற்றின் சந்தை பங்கு மிகக்குறைவாகவே உள்ளது.

கடந்த சில வருடங்களாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அமெரிக்கா தனது ஆண்ட்ராய்டு உரிமத்தை இடைநிறுத்தியது. இதனை அடுத்து சீனாவின் ஹுவாய் சமீபத்தில் HarmonyOS என்ற இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கு மாற்றாக உள்ள ஒரே போட்டியாளர் ஹுவாய் மட்டுமே.

Also Read: கூகுள் பே, PAYTM, போன் பேவிற்கு மாற்றாக UPI செயலியை துவக்க உள்ள டாடா..?

இந்தியா தனது சொந்த இயங்குதளத்தை உருவாக்குமேயானால் மற்றொரு போட்டியாளராக இந்தியாவின் OS இருக்கும். மேலும் இந்திய ஸ்டார்ட்அப்கள் தங்கள் தளங்களில் ஆப்ஸ்களை ஹோஸ்ட் செய்வதற்கு ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுளின் பிளே ஸ்டோர் ஆகியவற்றால் விதிக்கப்படும் கட்டணம் குறித்து நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றன.

மேலும் இந்தியாவுக்கென தனியாக ஒரு பிளே ஸ்டோரை உருவாக்க வேண்டும் என பேடிஎம் நிறுவனர் கடந்த வருடம் கூறியிருந்தார். தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா மீது சில மின்னணு தொலைதொடர்பு நிறுவனங்களும் தடை விதித்துள்ளன. இதனால் இந்தியா சொந்தமாக இயங்குதளத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.