ரஷ்யாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்க உள்ள இந்தியா..?

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை தள்ளுபடி விலையில் இந்தியா வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், இந்தியா ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதல் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் வரை அனைத்திற்கும் ரஷ்யாவை நம்பியிருக்கும் அதே வேளையில் ரஷ்யாவிடம் இருந்து விலகி இருக்க விரும்புவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் கூறிய அதிகாரிகள், உக்ரைன் மீதான படையெடுப்பை இந்தியா கண்டிக்கவில்லை. ஐநாவில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது என கூறினர். மேலும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சீனாவுடனான பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியா தனது ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதால் இந்தியாவின் நிலைபாட்டை மேற்கு நாடுகள் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ரஷ்யா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை அதிக தள்ளுபடியில் வழங்கும் நிலையில் அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்வோம் என கூறியுள்ளார். அத்தகைய வர்த்தகத்திற்கு போக்குவரத்து மற்றும் காப்பீட்டு தொகை உள்ளிட்ட வேலைகள் முடிந்ததும் இந்தியா தனது வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

சில சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்காக ரஷ்ய எண்ணெயை தவிர்த்து வருகின்றனர். ஆனால் இந்த பொருளாதார தடைகள் இந்தியாவை எரிபொருள் இறக்குமதி செய்வதை தடுக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதில் 2 முதல் 3 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக், இந்தியாவின் எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் பூரியுடன் தொலைபேசியில் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை ரஷ்யா ஆராய்ந்து வருவதாக நோவக் கூறினார்.

Also Read: முதன்முறையாக ரூபாயை பயன்படுத்தி ஈரானில் இருந்து யூரியாவை இறக்குமதி செய்ய திட்டம்..?

இருப்பினும் எவ்வளவு எண்ணெய் மற்றும் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என கூறப்படவில்லை. இந்த வர்த்தகத்தின் போது டாலரை தவிர்த்து இந்தியாவின் ரூபாய் மற்றும் ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தில் வர்த்தகம் செய்வது பற்றி இருநாடுகளும் ஆலோசித்து வருகின்றன.

இதுதவிர ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸிடம் இருந்து குறைந்த விலையில் உரத்தை இறக்குமதி செய்யவும் வாய்ப்பு இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தோ-பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலர் எலி ராட்னர் கூறுகையில், இந்தியா ரஷ்யாவுடன் சிக்கலான வரலாற்றையும் உறவையும் கொண்டுள்ளது.அவர்கள் பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்துதான் வாங்குகிறார்கள்.

Also Read: இந்தியாவிற்கு மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்.. ரஷ்ய எண்ணெய் நிறுவனம் அறிவிப்பு..

இருப்பினும் ஆயுத கொள்முதலை பல்வகை படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறது. மேலும் தற்சார்பு நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து விலக சில காலம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா ஒரு ஆன்லைன் கருத்தரங்கில் கூறுகையில், உலக சக்திகளுக்கு இடையேயான மோதலுக்கு புதுடெல்லி விலை கொடுக்கும் என எதிர்பார்க்க கூடாது. இது நாங்கள் உருவாக்கிய சண்டை அல்ல என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.