பாகிஸ்தான் எல்லைக்குள் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய இந்தியா..? பதற்றத்தில் பாகிஸ்தான்..

இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறுகையில், மார்ச் 9 அன்று பாகிஸ்தான் விமானப்படையின் வான் பாதுகாப்பு நடவடிக்கை மையத்தால், இந்திய எல்லைக்குள் அதிவேக பறக்கும் பொருள் ஒன்று கண்டறிப்பட்டது.

அந்த பொருள் இந்தியாவின் மேற்கு ஹரியான மாகாணத்தில் உள்ள இந்திய நகரமான சிர்சாவில் இருந்து பாகிஸ்தானின் கிழக்கு நகரமான மியான் சன்னுவுக்கு அருகே விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பொருளின் தன்மை குறித்து உறுதியாக தெரியவில்லை என மேஜர் இப்திகார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் மார்ச் 9 அன்று மாலை 6,43 மணி அளவில் பாகிஸ்தான் விமானப்படையின் வான் பாதுகாப்பு இயக்க மையத்தால் கண்காணிக்கப்பட்டது. பின்னர் திடீரென பாகிஸ்தான் எல்லையை நோக்கி சென்று பாகிஸ்தான் கிழக்கு நகரமான மியான் சன்னுவுக்கு அருகில் மாலை 6.50 மணி அளவில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷடவசமாக பொதுமக்களுக்கு காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இப்திகார் கூறுகையில், அது ஏவுகணை மாக் 3 வேகத்தில் 40,000 அடி உயரத்தில் பயணித்ததாகவும், விபத்துக்குள்ளாகும் முன் பாகிஸ்தான் வான் பரப்பில் 124 கிலோமீட்டர் பயணித்ததாகவும் இப்திகார் கூறியுள்ளார்.

இந்த பொருள் குறித்து தடவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், ஆரம்பகட்ட ஆய்வுகளின் முடிவில் இது வானிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை எனவும், இந்த ஏவுகணையில் வெடிபொருட்கள் இல்லை எனவும் பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.

இந்த ஏவுகணையின் விமானப்பாதையானது பாகிஸ்தான் மற்றும் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தரையில் பொதுமக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அப்பட்டமான அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், இது தொடர்பாக இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என இப்திகார் கூறியுள்ளார்.

இது ஏவுகணை சோதனையா அல்லது யாரையேனும் குறிவைத்து அனுப்பப்பட்டதா என எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published.