திபெத்தை குறிவைக்கும் இந்தியா.. இராணுவ வீரர்களுக்கு முதன்முறையாக திபெட்டாலாஜி படிப்பு..

முதன்முறையாக இந்திய இராணுவ அதிகாரிகள் விரிவான அறிவை பெறவும், எல்லை பகுதிகளில் உள்ள திபெத்திய சமூகத்துடன் தொடர்பை வலுப்படுத்தவும் திபெட்டாலஜி என்ற படிப்பை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல் பிரதேசத்தின் தஹுங்கில் உள்ள மத்திய ஹிமாலயன் மற்றும் கலாச்சார ஆய்வு நிறுவனத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் ஜீனியர் கமிஷன்ட் ஆபீசர் போன்றோர் 42 நாள் திபெட்டாலாஜி பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தேஜ்பூர் பாதுகாப்பு பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1950 க்கு முன்னும் பின்னும் திபெத்தில், திபெத்திய புத்தமதம், திபெத் மக்கள், திபெத்தின் சினிகேஷன் மற்றும் அரசியல் அமைப்பு போன்ற தலைப்புகளில் அதிகாரிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

1950 க்கு பிறகு திபெத், சீனாவின் படையெடுப்பு உட்பட பல அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டது. இதனால் தலாய் லாமா 1959ல் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். திபெட்டாலாஜி பாடத்திட்டத்தில் திபெத்திய மொழி கற்றல், திபெத்திய பௌத்தம், திராங் மற்றும் போம்டிலா மடங்களுக்கு செல்வது ஆகியவை அடங்கும்.

இந்திய இராணுவ அதிகாரிகளும் திபெத்திய புத்த மதத்தின் முக்கிய திருவிழாவான சாகா தாவாவில் கலந்து கொண்டனர். இது புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. இந்த பாடத்தின் முக்கிய அம்சமாக குரு துல்கு ரின்போச்சே, போம்டிலா மடாலயத்தின் மடாதிபதி மற்றும் திபெத் நிபுணர் கிளாட் ஆர்பி ஆகியோரின் விரிவுரைகளும் அடங்கும்.

மார்ச் 2022 ல், குரு துல்கு ரின்போச்சேவிற்கு ஆன்மீகத்திற்கான இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் தவாங் மடாலயத்தை நிறுவிய மெராக் லாமா லோட்ரோ கியாட்சோவின் பரம்பரையில் 12 வது அவதாரமாக அடையாளம் காணப்படுகிறார். சீன திபெத் மீது படையெடுத்தபோது தலாய் லாமா அடைக்கலம் பெற இந்த மடாலயத்தை அடைந்தார்.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் தலாய் லாமாவின் பிறந்த நாளிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டதில் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், மத்திய கலாச்சார மற்றும் வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி, சட்ட இணை அமைச்சர் எஸ்.பி.பாகெல், தைவானின் தூதர் பௌஷுவான் கெர் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் சார்ஜ் டி அஃபேர்ஸ் பாட்ரிசியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுதவிர தலாய் லாமா இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு காஷ்மிர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சென்றார். கொரோனா தொற்றால் கடந்த 2 வருடங்களாக வெளி பயணங்களை தவிர்த்து வந்த தலாய் லாமா, 2 வருடங்களுக்கு பிறகு முதல் பயணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாகிற்கு சென்றுள்ளார். கடந்த 2020ல் கால்வான் மோதல் மற்றும் பூடான் எல்லையில் பிரச்சனை உள்ளிட்ட மோதல் அதிகரித்துள்ள நிலையில் திபெட்டாலாஜி படிப்பு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.