இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்த வேண்டும்: டென்மார்க்
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், இந்திய பிரதமர் மோடியிடம் இந்தியாவின் செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஐரோப்பியாவில் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி ஜெர்மன் பயணத்தை முடித்து கொண்டு நேற்று டென்மார்க் சென்றடைந்தார். பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் நேரடியாக விமானம் நிலையம் சென்று வரவேற்றார்.
பின்னர் இருதலைவர்களும் பிரதமர் அலுவலகம் சென்றனர். இந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக டென்மார்க்கும் இந்தியாவும் பசுமை எரிசக்தி மற்றும் சுத்தமான நீர் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனை அடுத்து இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டென்மார்க் பிரதமர், இருநாட்டு உறவுகளையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். உக்ரைன் ரஷ்யா போர் குறித்து விவாதித்தோம் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து விவாதித்தோம்.
Also Read: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1 மில்லியன் ஐபோன்களை ஏற்றுமதி செய்த ஆப்பிள் நிறுவனம்..
புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து தன்னிச்சையான விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளோம். ரஷ்ய அதிபர் இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும். ரஷ்யா உடனான செல்வாக்கை பயன்படுத்தி இந்தியா இந்த போரை நிறுத்த வேண்டும் என டென்மார்க் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read: ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எரிபொருள் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்..
இன்று கோபன்ஹேகனில் நடைபெறும் இந்தோ-நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி, நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய தலைவர் ஒருவர் டென்மார்க் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.