ஏவுகணை தொழிற்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது: DRDO தலைவர் சதீஷ் ரெட்டி
JNU நடத்திய ஒரு ஆன்லைன் நிகழ்ச்சியில் பேசிய DRDO தலைவர் சதீஷ் ரெட்டி, இந்தியா ஏவுகணை தொழிற்நுட்பத்தில் தன்னிறைவு அடைந்துள்ளதாக கூறினார். மேலும் எந்த ஒரு மேம்பட்ட ஏவுகணையையும் இந்தியாவால் தயாரிக்க முடியும் எனவும் ரெட்டி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சதீஷ் ரெட்டி, நாடு வளமானதாக மாற வேண்டும் என்றால் நாம் முதலில் தன்னிறைவு அடைய வேண்டும். ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் ஏபிஜே அப்துல்கலாம் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளை பற்றி குறிப்பிட்ட ரெட்டி அவர்களின் உழைப்பினால் தான் இந்தியா ஏவுகணை தொழிற்நுட்பத்தில் தன்னிறைவு அடைந்துள்ளதாக கூறினார்.
இந்தியா பல வகையான ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. அக்னி, பிருத்வி, ஆகாஷ், திரிசூல், நாக் போன்ற ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. பிற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து பிரமோஸ் போன்ற ஏவுகணைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் உயர்ந்துள்ளோம்.
மேலும் 2019 ஆண்டு எதிரி நாட்டு செயற்கைகோளை அழிக்கும் ஏசாட் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தினோம். இதன் மூலம் செயற்கைகோளை அழிக்கும் தொழிற்நுட்பத்தை கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது.
மேலும் DRDO தற்போது ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு, சைபர்ஸ்பேஸ், பாதுகாப்பு அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை உருவாக்கி வருவதாகவும் DRDO தலைவர் சதீஷ் ரெட்டி கூறினார்.
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் தான். ஆத்ம நிர்பார் பாரத் என்ற தொலைநோக்கு பார்வையில் தன்னிறைவு அடைவதற்கு கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.
Also Read: பாகிஸ்தானின் போர் விமானத்தை வாங்க உள்ள அர்ஜென்டினா..? எந்த விமானம் தெரியுமா..?