பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக இந்தியா அறிவிப்பு..

இந்தியா உடனான கால்வான் பள்ளத்தாக்கு எல்லை மோதலில் தலையில் காயம் அடைந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கமாண்டர் குய் ஃபபாவோவை டார்ச் ரிலேயின் போது ஜோதி ஏந்த அனுமதித்ததற்காக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பிப்ரவரி 4 முதல் 20 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கால்வான் பகுதியில் இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன அரசு கூறியது. இருப்பினும் உயிரிழப்பு 39 ஆக இருக்கலாம் என உலக செய்தி மற்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் குளிர்கால ஜோதி ஓட்டம் பிப்ரவரி 2 முதல் 4 வரை நடைபெறுகிறது.

இதில் 1,200 டார்ச் ஏந்தியவர்களுடன் கால்வான் மோதலின் போது தலையில் காயமடைந்த சீன வீரர் குய் ஃபபாவோபும் டார்ச் ரிலேயின் போது ஜோதி ஏந்தி சென்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனாவின் இந்த முடிவு வருந்ததக்கது என கூறினார்.

மேலும் குளிர்கால ஒலிம்பிக்கின் துவக்க மற்றும் நிறைவு விழாவில் இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் தூதர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற ஒரு நிகழ்வை அரசியலாக்குவதற்கு சீன தரப்பு தேர்வு செய்திருப்பது உண்மையில் வருந்ததக்கது என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒலிபரப்பு செய்யாது என பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்படி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் முஸ்லிம்களை துன்புறுத்துவது, கட்டாய உழைப்பு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் இன அழிப்பு போன்ற மனித உரிமை மீறல் காரணமாக சீனாவில் நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.