சீனாவின் ஹூவாய் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்..

லரி ஏய்ப்பு தொடர்பாக சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாய் நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹுவாய் நிறுவனத்திற்கு சொந்தமான டெல்லி, அரியானாவின் குருகிராம், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள அலுவலகங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் ஹுவாய் நிறுவனத்தின் நிதி ஆவணங்கள், கணக்கு புத்தகங்கள் மற்றும் நிறுவனத்தின் பதிவுகளை சரிபார்த்தனர்.

சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடந்து வரும் சோதனைகளுக்கு பதிலளித்த சீன நிறுவனம் நாட்டின் சட்டத்திட்டதிற்கு உறுதியாக இணங்குவதாக கூறியுள்ளது. எங்கள் அலுவலகத்திற்கு வருமான வரிக் குழுவின் வருகை மற்றும் சில பணியாளர்களுடன் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு தொடர்புடைய அரசு துறைகளை அணுகுவோம். விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி முழுமையாக ஓத்துழைத்து சரியான நடைமுறையை பின்பற்றுமாறு எங்களது இந்திய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளோம் என அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் மத்திய அரசு 5ஜி சோதனையிலிருந்து ஹுவாய் நிறுவனத்தை விலக்கி வைத்தது. இருப்பினும் தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் பழைய ஒப்பந்தங்களின்படி, தங்கள் நெட்வொர்க்குகளை பராமரிக்க ஹுவாய் மற்றும் ZTE நிறுவனத்திடம் இருந்து டெலிகாம் கியரை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டில் வருமான வரித்துறை சீன மொபைல் தொடர்பு மற்றும் மொபைல் உற்பத்தி நிறுவனங்களான சியாமி, ஓபோ மற்றும் அந்நிறுவனங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராகவும் சோதனை நடத்தியது.

இந்த சோதனை இந்திய வரிச்சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறியதால் சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில் தகவல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி 54 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதில் ஃப்ரீ ஃபயர், டென்சென்ட், அலிபாபா, நெட்ஈஸ் போன்ற கேமிங் செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் மூலம் இந்தியர்களின் தரவுகளை சீனா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தரவு மையங்களுக்கு அனுப்புவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.