இம்ரான் கான் வீட்டு வாடகையை 8 ஆண்டுகளாக செலுத்தி வந்த அமெரிக்க தூதரகம்..?

பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நெருங்கிய நண்பருமான மொஹ்சின் பெய்க், இம்ரான்கானின் வீட்டு வாடகையை 8 ஆண்டுகளாக அமெரிக்க தூதரகம் செலுத்தி வந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் செய்தி சேனலில் பேசிய மொஹ்சின் பெய்க், நான் இதை தேசிய தொலைக்காட்சியில் சொல்கிறேன், அவர் விரும்பினால் என் மீது வழக்கு தொடரலாம், ஆனால் இம்ரான்கான் அமெரிக்க சதி என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி வருகிறார் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்க துணை தூதரகம் அவரது வீட்டு வாடகையை எட்டு ஆண்டுகளாக செலுத்தி வந்தது. அவர்தான் உண்மையான அமெரிக்க ஏஜென்ட். நான் பொய் கூறுவதாக இம்ரான்கான் நினைத்தால், அவர் என் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். அவர் ஒரு பொய்யர் என மொஹ்சின் பெய்க் தெரிவித்துள்ளார்.

மேலும் இம்ரான்கான் தனது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை நியாயப்படுத்துவதற்கும், புதிய ஆட்சியை விமர்சிப்பதற்கும் வெளிநாட்டு சதி என்ற கோட்பாடுகளை தூண்டுடிகிறார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் உதவி செயலர் டொனால்ட் லூ, மார்ச் மாதம் வாஷிங்டனுக்கான பாகிஸ்தான் தூதரை சந்தித்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கூறியதாக இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பு குற்றம் சாட்டினார்.

இருப்பினும் இம்ரான் கான் கூறிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்தது. இது பாகிஸ்தானின் உள்விவகாரம் என கூறியது. கடுமையான நிதி நெருக்கடியினால் தான் இளைஞகள் இம்ரான்கானுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியதாகவும், இதற்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்தது.

பின்னர் ஏப்ரல் 10 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஷேபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இருப்பினும் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக தற்போதைய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாகவும், ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான தற்போதைய அரசு அமெரிக்காவின் கைக்கூலி எனவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், இம்ரான் கான் தான் உண்மையான அமெரிக்க ஏஜென்ட் எனவும், 8 ஆண்டுகளாக அவரது வீட்டு வாடகையை அமெரிக்க தூதரகம் செலுத்தி வந்ததாக மொஹ்சின் பெய்க் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.