அடுத்த மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ள IAC விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பல்..
முழுவதும் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட விமானந்தாங்கி கப்பலான IAC விக்ராந்த், 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 15 தேதி கடற்படையில் இணைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான IAC விக்ராந்த், அடுத்த மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கான இறுதி தேதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த IAC விக்ராந்த் மூலம் இந்திய பெருங்கடலில் இந்தியாவின் பலம் மேலும் அதிகரிக்கும்.
இந்த விமாந்தாங்கி போர்கப்பல் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் வடிவமைக்கப்பட்டு, அரசுக்கு சொந்தமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானந்தாங்கி போர்கப்பல் பிப்ரவரி 2009ல் கட்டுமானம் தொடங்கியது மற்றம் 2021 ஆம் ஆண்டு கடல் சோதனையை தொடங்கியது.
இந்த விமானந்தாங்கி போர்கப்பலுக்கான விமான சோதனைகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்கப்பல் 37,500 டன்கள் இடப்பெயர்ச்சியுடன் Mig-29K போர் விமானங்களை இயக்கும். காமோவ்-31 ஹெலிகாப்டர்கள், MH-60R மல்டி ரோல் ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்நாட்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களும் இதில் இயக்கப்படும்.
மிக் போர் விமானம் தவிர போயிங் F/A-18E Super Hornet மற்றும் டசால்ட் ஏவியேசனின் Rafale-M ஆகிய போர் விமானங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. 1961 முதல் 1997 வரை இந்திய கடற்படையால் இயக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான INS விக்ராந்தின் பெயர் இந்த கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
விமானந்தாங்கி போர்கப்பல் 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் அதிகாரிகள், விமானிகள், மாலுமிகள் என மொத்தம் 1,700 பேர் இருப்பார்கள். மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 1961 முதல் 1997 வரை பிரிட்டிஷ் வம்சாவளி கப்பலான INS விக்ராந்த், 1987 முதல் 2016 வரை பிரிட்டிஷ் வம்சாவளியான INS விராட் மற்றும் 2013 முதல் ரஷ்ய வம்சாவளியான INS விக்ரமாதித்யா போர்கப்பல்கள் இந்திய கடற்படையால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து 2.33 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கிய INS விக்ரமாதித்யா போர் கப்பல் ஒன்றை மட்டும் இயக்கி வருகிறது. IAC விக்ராந்த் இந்தியாவின் நான்காவது விமானந்தாங்கி கப்பலாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட IAC விக்ராந்த் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உள்நாட்டிலேயே விமானந்தாங்கி கப்பலை உருவாக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
சீனா தற்போது CV-16 Liaoning CV-17 Shandong என்ற இரண்டு விமானந்தாங்கி போர்கப்பல்களை இயக்கி வருகிறது. கடந்த மாதம் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலான புஜியானை கடற்படையில் இணைத்துள்ளது. இந்திய கடற்படைக்கு மூன்று விமானந்தாங்கி போர்கப்பல்கள் தேவை என இந்திய கடற்படை கோரிக்கை வைத்துள்ளது.