இந்தியாவில் ஷரியா நீதிமன்றங்கள் இல்லை என நினைத்தேன்.. நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க கூடாது: கீர்ட் வில்டர்ஸ்..

முகம்மது நபி தொடர்பாக நாட்டில் நடக்கும் கலவரத்திற்கு நுபுர் சர்மாதான் காரணம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய நிலையில். நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் கீர்ட் வில்டர்ஸ் நுபுர் சர்மாவிற்கு மீண்டும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, தனக்கு எதிராக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் நிபுர் சர்மாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைகால அமர்வில் நீதிபதி சூர்யா காந்த் கூறுகையில், இஸ்லாமியர்களின் வன்முறைக்காக அவர் தொலைகாட்சி முன் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அவர் நாடு முழுவதும் உணர்ச்சிகளை தூண்டிய விதம், நிபுர் சர்மாவின் தளர்வான நாக்கு காரணமாக நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட குழப்பத்திற்கு அவர் தான் காரணம் என நீதிபதி தெரிவித்தார்.

ஒரே குற்றத்திற்காக பல வழக்குகள் பதிவு செய்யப்படும் போது FIR யை இணைப்பது வழக்கம் என்றாலும் நிபுர் சர்மாவுக்கு அந்த உரிமை இல்லை என நீதிபதிகள் கூறினர். மேலும் நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், சாதாரண குடிமக்களுக்கு கிடைக்கும் நீதித்துறை உரிமையை நுபுர் சர்மா இழந்துவிட்டார் எனவும் நீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், நெதர்லாந்து பாராளுமன்ற எம்.பி கீர்ட் வில்டர்ஸ் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஷரியா நீதிமன்றங்கள் இல்லை என நினைத்தேன். முகமதுவை பற்றிய உண்மையை பேசியதற்காக அவர் ஒருபோதும் மன்னிப்பு கேட்க கூடாது.

உதய்பூர் கொலைக்கு அவர் பொறுப்பல்ல. தீவிர சகிப்புத்தன்மையற்ற ஜிஹாதி முஸ்லிம்கள் தான் பொறுப்பு, வேறு யாரும் இல்லை. நுபுர் சர்மா ஒரு ஹீரோ என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கீர்ட் வில்டர்ஸ் இதற்கு முன் பல முறை நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக நெதர்லாந்து பாராளுமன்ற எம்.பி கீர்ட் வில்டர்ஸ்க்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றன. அதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு எதிராக, கௌ மகாசபா தலைவர் அஜய் கவுதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதி சூர்யா காந்த் தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் எனவும், அவரது கருத்துக்கள் தேவையற்றவை என அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.