மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக இந்தியாவில் 530 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள ஹூண்டாய் நிறுவனம்..
தென்கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 2028 ஆம் ஆண்டுக்குள் ஆறு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த 530 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு அதன் முதல் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்கள் மற்றும் செடான்கள் உள்ளிட்ட மலிவு மற்றும் பிரீமியம் மின்சார மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக இந்தியாவின் ஹூண்டாய் மோட்டார் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குனர் தருண் கார்க் கூறினார்.
இந்த முதலீடு ஆறு வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான முக்கிய பங்களிப்பவராக இருக்க விரும்புவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் அனைத்து நாடுகளும் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் மத்திய அரசும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இன்று 2 சதவீதமாக இருக்கும் மின்சார கார்களின் விற்பனை, 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலக அளவில் மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனம் 25 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதனை 2030 ஆம் ஆண்டிற்குள் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மேலும் மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்ககோரி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டாடா மோட்டார் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தியை தொடங்க உள்ளது.
Also Read: உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனமும் மின்சார கார் உற்பத்தியில் இறங்கி உள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் அதன் பிரத்யேக எலக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்மில் (E-GMP) கட்டமைக்கப்பட உள்ளது.
எலக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட வாகனங்கள் இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். மற்ற கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 300-400 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும் என தருண் கூறியுள்ளார். ஹூண்டாய் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு அதன் கோனா மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
ஆனால் அதன் விலை அதிகமாக இருந்ததாலும், சார்ஜிங் மையங்கள் குறைவாக இருந்ததாலும் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் மலிவு விலையில் மின்சார வாகனங்களை உருவாக்க உள்ளதாக தருண் கூறினார். ஹூண்டாய் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய சப்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் மலிவு விலையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என கூறுகிறது. மேலும் ஹோம் சார்ஜர்கள் மட்டும் இல்லாமல் பொது சார்ஜிங் வசதிகளையும் மேம்படுத்தி வருவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.