இந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க கோரி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பாகிஸ்தான் இந்துக்கள் கடிதம் எழுதியுள்ளனர்

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம் கரக் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு இந்து கோயிலை நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து இடித்து தீயிட்டு கொளுத்தினர். இந்த கோயில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது, 1920ஆம் ஆண்டுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்து கோயிலை இடித்தது மட்டும் அல்லாமல் தீயிட்டு கொளுத்தியது சிறுபான்மை மக்களான இந்துக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். இந்து கோவிலை இடித்ததாக 26 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் இந்துக்கள் பல்வேறு இந்து அமைப்புகளை உருவாக்கி உள்ளனர். இதில் இந்துக்கள் மன்றம், இந்து ஷ்வயம் சேவக் சங்கம், பிரிட்டன் இந்து கவுன்சில், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களான இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில், சமீப காலமாக பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட மற்ற சிறுபான்மையினரின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இங்கிலாந்து பிரதமர் இதற்கு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மூலம் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்த கடிதம் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *