மசூதிகளில் ஒலிப்பெருக்கியை தடை செய்ய கோரிக்கை.. பதிலளிக்க குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடகோரி தொடர்ந்த பொதுநல வழக்கில், இன்று குஜராத் உயர்நீதிமன்றம் குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மார்ச் 10 ஆம் தேதிக்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
காந்திநகர் மாவட்டத்தில் 5சி தெருவில் வசித்து வரும் மருத்துவர் தர்மேந்திர விஷ்ணுபாய் பிரஜாபதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அரவிந்த குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் ஜே.சாஸ்திரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், தனது சுற்றுப்புறத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்கு யாரும் வரவில்லை என்றாலும், ஆஸானை ஓதுவதற்கு ஒரு நாளைக்கு 5 முறை ஒலிபெருக்கியை பயன்படுத்துகிறார்கள். இது தனக்கும் அருகில் வசிக்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தர்மேஷ் குர்ஜாரிடம் ஒலிபெருக்கியின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், வழிகாட்டுதல்களை மேற்கோள்காட்டி, அனுமதிக்கப்பட்ட வரம்பு 80 டெசிபல்கள் என்றும், ஆனால் ஆஸானின் போது ஒலி அளவு 200 டெசிபல்களுக்கு மேல் உள்ளதாக கூறினார்.
மேலும் திருமண ஊர்வலங்கள் மற்றும் பிற விழாக்களின் போது ஏற்படும் ஒலி மாசு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை தான் திருமணம் நடக்கும் என்றும், இதனால் உரத்த இசையை இசைப்பது புரிகிறது என்றும், ஆனால் இஸ்லாத்ததை நம்பாதவர்களுக்கு ஒரு நாளைக்கு 5 முறை ஒலிபெருக்கியில் சத்தம் போடுவதை கேட்பது ஒலி மாசுபாடு என தெரிவித்தார்.
மேலும் கோவிட் காரணமாக ஊரடங்கு உள்ள நிலையில் மசூதிக்கு யாரும் அதிக அளவில் வராத நிலையிலும் 5 முறை ஆஸான் ஒலிக்கப்படுவதாக வழக்கறிஞர் கூறினார். ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி மாசுபடுவதால் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு கடுமையான மனநோய், உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் பணி திறனையும் பாதிப்பதாகவும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மே 2020ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டிய மனுதாரர், அதில் ஆஸான் நிச்சியமாக இஸ்லாத்தின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆனால் மைக்ரோஃபோன் மற்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது அவசியமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் ஜூன் 2020ல் மனுதாரர் காந்திநகரில் உள்ள மம்லதார் அலுவலகத்தில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக சமர்பித்ததாகவும், பின்னர் அதை காந்திநகரில் உள்ள செக்டார் 7 காவல் நிலையத்திற்கு அனுப்பியதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார்.
மேலும் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு உள்ளுர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் அமைதியை குலைப்பதன் மூலம் தொழுகை நடத்தப்பட வேண்டும் என எந்த மதமும் கூறவில்லை என்றும், குரல் பெருக்கிகள் மூலமாகவோ, மேளம் அடிப்பதன் மூலமாகவோ பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எந்த மதமும் கூறவில்லை என உச்சநீதிமன்றம் கூறியதை மனுதாரர் மேற்கோள் காட்டினார். இதனை அடுத்து மார்ச் 10 ஆம் தேதிக்குள் குஜராத் அரசு பதில் மனு தாக்கல் செய்ய குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.