தமிழகம் வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு; GoBackRahul என ட்விட்டரில் ட்ரெண்டிங்

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல்காந்தி நாளை தமிழகம் வர உள்ளார். இதற்கு ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு வரவேண்டாம் என கூறி Jallikattu, GoBackRahul என்னும் ஹேஸ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளை முதல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை பார்வையிட காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், ராகுலின் தமிழகம் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால், ராகுல் காந்தியின் வருகைக்கு ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்ததே காங்கிரஸ் கட்சி தான் அதற்கு ஆதாரமான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு அப்போதைய தனி நீதிபதியான ஆர்.பானுமதி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், எருது ஓட்டம் ஆகியவை பிராணிகளை வதைப்படுத்துவதாக கூறி அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடைசெய்து 2006-ல் உத்தரவு பிறப்பித்தார். பிறகு மேல்முறையீட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது..

அதன்பின்பு 2007ல் ஜல்லிக்கட்டு வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு தடை என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

பின்பு 2008ல் ஜல்லிகட்டு நடத்தகோரி ஜனவரியில் உச்சநீதிமன்றத்தை அணுகியபோது ஜல்லிகட்டு நடத்த அனுமதி தரவில்லை. உடனே தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிபந்தனைகளுடன் தற்காலிகமாக அனுமதி கொடுக்கப்பட்டது.

மீண்டும் 2011ல் பீட்டா உச்சநீதிமன்றம் தடை வாங்க முயற்சி செய்தது. ஆனால் நிபந்தனைகளுடன் ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

பிறகு 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் காட்சி படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் சிங்கம், புலி, கரடி, கருஞ்சிறுத்தை, குரங்குகள் பட்டியலோடு காளைகளையும் சேர்த்து உத்தரவிட்டார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். பலரின் எதிர்ப்பையும் மீறு இந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

பின் காளையை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்த பிறகு அதனை அடிப்படையாக நடந்த வழக்குகளை வைத்து 2014-ல் அதற்கு உச்ச நீதிமன்றம் நிரந்தரமாக தடை விதித்தது. இதன் பிறகு 2015ல் ஜல்லிகட்டு நடத்தப்படவில்லை. பின்பு பாஜக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது 2016ல் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்த ஜெய்ராம் ரமேஷ் ஆணையை நீக்கி உத்தரவிட்டார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்.

இதனை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் மற்றும் பீட்டா உட்பட 12 அமைப்புகள் உச்சநீதின்றத்தை நாடி ஜல்லிகட்டுக்கு தடை வாங்கினார்கள். தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவும் 2016 நவம்பரில் தள்ளுபடியானது.

2017ல் ஜல்லிகட்டு நடத்தகோரி மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. பின்பு தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தது. இதனை தொடர்ந்து 2016ல் பாஜக அரசு காளையை பட்டியலில் இருந்து நீக்கியதால், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‛பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 2014ல் நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தோம். அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சி என ஜெய்ராம் ரமேஷ் பேசியிருந்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்துவிட்டு அதனை காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சி என்று கூறிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், இப்போது ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருவது அரசியல் லாபத்திற்காக என சிலர் விமர்சிக்கின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வர வேண்டாம் எனவும், காங்கிரஸ் விதித்த தடையை பல போராட்டங்களின் மூலம் மீட்டெடுத்துள்ளோம், உங்களது தவறை மறைக்க ராகுல் ஜல்லிகட்டை பார்வையிட வருவதாகவும் கூறி ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

One thought on “தமிழகம் வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு; GoBackRahul என ட்விட்டரில் ட்ரெண்டிங்

  • January 14, 2021 at 7:15 am
    Permalink

    அந்த பானுமதி ஒரு crypto கிறிஸ்தவர். அதையும் சொல்லவும். Ithu அப்பட்டமான missionary சதி.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *