தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தை சேர்ந்த கௌதமி(19) தாய் தந்தையை பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டிலிருந்து ஒதுக்குப்புறமாக சென்றுள்ளார் கௌதமி. அப்போது பின்தொடர்ந்து வந்த உறவினரான அஜித்குமார் ஆள் நடமாட்டம் இல்லாத சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கத்தியை காட்டி மிரட்டி கௌதமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சுதாரித்த கௌதமி அஜீத்குமாரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவனை குத்தியுள்ளார். கௌதமி குத்தியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்பு ரத்தக்கறை படிந்த கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கௌதமி, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற தனது உறவினரை வெட்டிக்கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்துள்ள சோழவரம் போலீசார் கொலை நடந்த இடத்தில் மதுபாட்டில் கிடப்பதால் இது திட்டமிட்ட கொலையா என விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையான அஜித்குமாருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் சோழவரம் காவல் நிலையத்தில் அஜித்குமார் மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் கௌதமி தற்போது நடந்து முடிந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *