மோடி அறிமுகப்படுத்திய பெண் கல்வி திட்டம்.. வரவேற்கும் பெற்றோர்கள்..

பேடி பச்சாவ் பேடி பதாவ் நிதியை பயன்படுத்தி வடக்கு டெல்லியில் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான நூலகம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வடமேற்கு டெல்லியின் கராலா கிராமத்தில் போதிய வசதி கிடையாது.

வீடுகள் நெருக்கமாகவும் சுகாதாரமற்ற முறையிலும் காணப்படும். மேலும் அந்த கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் உள்ளனர். சிறிய வீடு என்பதால் போதிய காற்றோட்டமில்லாமல் படிக்கும் மாணவ மாணவிகள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

கராலா கிராமத்தில் உள்ள சுவாதி என்ற பெண் SSC தேர்வுக்கு தயாராகி வருகிறார். அவரது தந்தை பேருந்து நடத்துனராக பணிபுரிகிறார். இருப்பினும் போதிய வருமானம் இல்லை. மேலும் வீட்டில் போதிய வசதி மற்றும் புத்தகம் இல்லாததால் அவரால் தேர்வுக்கு தயாராக முடியவில்லை.

இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பேடி பச்சாவ் பேடி பதாவ் திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் கராலா கிராமத்தில் பெண்களுக்கான நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை அறிந்த சுவாதியின் தந்தை தனது மகளை நூலகத்திற்கு அழைத்து சென்று அங்கு படிக்க வைத்துள்ளார்.

நூலகத்தில் 40 பெண்கள் அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு SSC மட்டும் அல்லாமல் JEE, NEET என அனைத்து வகையான தேர்வுக்கும் தேவையான புத்தகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு நூலகம் செல்லும் சுவாதி மாலை நூலகம் மூடும் வரை அதாவது மாலை 5 மணி வரை நூலகத்தில் படிக்கின்றார்.

கராலா கிராமத்தில் தனியார் நூலகங்கள் இருந்தாலும் விலை அதிகமாக இருப்பதால் அங்கு யாரும் படிக்க செல்வதில்லை. தனியார் நூலகத்தில் மாதத்திற்கு 800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசு நூலகத்தில் இலவசமாக படிக்கலாம். இந்த நூலகத்திற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் இது போன்று இன்னும் பல நூலகங்கள் திறக்க வேண்டும். கணினி மற்றும் இன்டர்நெட் வசதியும் செய்து தர வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேடி பச்சாவ் பேடி பதாவ் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை மையமாக வைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.