பாகிஸ்தானில் மற்றொரு சம்பவம்.. இளைஞனை கல்லால் அடித்து கொலை செய்த அடிப்படைவாதிகள்..

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் டெராவாலா கிராமத்தில் ஒரு நபர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை கிழித்து எறிந்ததாக பரவிய தகவலை அடுத்து கல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

சனிக்கிழமை மாலை ஜங்கிள் டெராவாலா கிராமத்தில் உள்ள மஸ்ஜித் ஷாமுகீம் முவாஸா மசூதியில் ஒரு இளைஞர் புனித நூலான குரானின் ஒரு பக்கத்தை கிழித்து எரித்ததாக தகவல் பரவியுள்ளது. குரானை எரித்ததை பார்த்த மசூதியின் மதகுரு போலிசாரிடம் தெரிவிக்கும் முன் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார்.

உடனே மசூதி முன் 300 க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். அவர்கள் அந்த இளைஞனை தரத்தரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து கொன்றுள்ளனர். குரானை எரிக்கவில்லை என அந்த இளைஞர் கூறியும் கேட்காமல் அந்த கும்பல் இளைஞனை கல்லால் அடித்தே கொன்று மரத்தில் தொங்கவிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த போது அங்கு காவல்துறையும் இருந்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை விட போராட்டகாரர்கள் அதிகமாக இருந்ததால் காவல்துறை இளைஞரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. பின்னர் மரத்தில் தொங்கவிடப்பட்ட இளைஞரின் உடலை இரண்டு போலிஸ்காரர்கள் மரத்தில் ஏறி உடலை கீழே இறக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அடிப்படைவாதிகள் அந்த இரண்டு போலிஸ்காரர்கள் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞர் பாரா சாக் கிராமத்தை சேர்ந்த பஷீர் அகமதுவின் மகன் முஷ்டாக் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவர் வீட்டை விட்டு வெளியேறி நீண்ட நாட்களாக வெளியில் சுற்றி திரிந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸ் ராவ் சர்தார் அலி கான், பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்டாரிடம் அறிக்கை சமர்பித்துள்ளார்.

முதற்கட்ட அறிக்கையில், 33 சந்தேக நபர்கள் மற்றும் 300 தெரியாத நபர்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாக இம்ராம்கான் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சியால்கோட் மாவட்டத்தில் பிரியந்தா குமாராவை அடித்து அவரை உயிருடன் எரித்துள்ளனர். சம்பவத்தன்று பிரியந்தா குமாரா தான் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்தின் வெளியே சுவற்றில் போஸ்டர் ஒன்று ஒட்டியிருந்ததை கிழித்துள்ளார்.

அந்த போஸ்டரில் குரானின் வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. போஸ்டரை கிழிப்பதை பார்த்த சிலர் மற்றவர்களிடம் கூற உடனே அங்கு நூற்றுகணக்கானோர் குவிந்தனர். அவர்கள் பிரியந்தாவை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து கொன்றுள்ளனர். பின்னர் பிரியந்தா மயங்கி விழுந்த நிலையில் உயிருடன் அவரை எரித்து கொன்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.