அடிக்கடி விபத்து: செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்..?

இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்கள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஶ்ரீநகர் விமானப்படை தளத்தில் உள்ள மிக்-21 பைசன் போர் விமானத்தை உள்ளடக்கிய 51 படை பிரிவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

வியாழன் கிழமை அன்று ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு மிக்-21 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். விமானத்தின் பாகங்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சிதறி கிடந்தன.

ஶ்ரீநகர் விமானத்தள படைப்பிரிவை சேர்ந்த மிக்-21 போர் விமானத்தின் மூலம் தான் பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு பாலகோட் வான்வழி தாக்குதலுக்கு பிறகு நடந்த மோதலில் விங் காமாண்டராக இருந்த அபிநந்தன் பாகிஸ்தானின் F-16 போர்விமானத்தை சுட்டு வீழ்த்திய பெருமை இந்த ஶ்ரீநகர் மிக்-21 போர் விமானத்திற்கு உண்டு. இந்த நிலையில் இந்த விமானப்படை படைபிரிவு தான் செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளது.

ஶ்ரீநகர் படைப்பிரிவு ஓய்வுக்கு பின் மூன்று மிக்-21 படைப்பிரிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். அவற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு படைப்பிரிவு வீதம் 2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மிக்-21 படைப்பிரிவும் ஓய்வு பெற உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து 1963 ஆம் ஆண்டு முதல் மிக்-21 போர் விமானத்தை இந்தியா வாங்கியது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1200 மிக்-21 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த மிக்-21 விமான விபத்தின் மூலம் விமானிகள் மற்றும் பொதுமக்கள் என கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் 6 மிக்-21 விமான விபத்துக்களில் பல விமானிகள் உயிரிழந்த நிலையில் வியாழன் அன்று நடந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்து குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு விமானப்படை வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.