சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்.. இந்தியா கனடா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை..!

இந்தியாவும் கனடாவும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளன.

வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் கனேடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி என்ஜி ஆகியோர் இந்தியா மற்றும் கனடா இடையிலான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கான (CEPA) பேச்சு வார்த்தைகளை முறையாக மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர்.

இதன் மூலம் ஒரு இடைகால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். அதை தொடர்ந்து முழு அளவிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அல்லது ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும். இந்தியாவும் கனடாவும் 2010 ஆம் ஆண்டில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கனடாவும் இந்தியாவும் இருதரப்பு முதலீட்டை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் ஒப்புக்கொண்டன. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை தீவிரப்படுத்துதல் மற்றும் CEPA இலக்கை அடைவதற்கான விருப்பங்களை பரிசீலிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

வேளாண் பொருட்கள், ரசாயனங்கள், பாதணிகள், ஜவுளி, ஆட்டோமொபைல், எரிசக்தி, மின்னணுவியல், கனிமங்கள், உலோகங்கள், நகர்புற வளர்ச்சி, தகவல் தொழிற்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இதுதவிர மருந்துகள் மற்றும் முக்கியமான மற்றும் அரிதான பூமி கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கம் போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட இரு நாடுகளுக்கு இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 11 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

ஏப்ரல் 2021-ஜனவரி 2022 வரையில் கனடாவிற்கான இந்திய ஏற்றுமதி 3 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் முக்கியமாக மருந்துகள், மருந்து பொருட்கள், இரும்பு, எஃகு பொருட்கள், கடல் பொருட்கள், பருத்தி துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் அடங்கும். அதேநேரம் கனடா இந்தியாவிற்கு பருப்பு வகைகள், உரங்கள், நிலக்கரி மற்றும் கச்சா பெட்ரோலியம் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.