UAE உடன் சுதந்திர ஏற்றுமதி ஒப்பந்தம் நாளை கையெழுத்து.. 500 பில்லியன் டாலர் இலக்கை அடைய திட்டம்..
பிப்ரவரி 18 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் தலைமையில் நடைபெறும் விழாவில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமிரேட்ஸூம் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட உள்ளனர்.
இதன் மூலம் இரு நாடுகளும் வெவ்வேறு துறைகளை சார்ந்த பல தயாரிப்புகளுக்கு வரியில்லா சலுகைகளை வழங்க முடியும். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அதிகாரப்பூர்வமாக விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கின.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டு நாடுகளும் தங்களுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படும் அதிகப்பட்ச எண்ணிகையிலான பொருட்களின் மீது சுங்க வரிகளை குறைப்பது அல்லது நீக்கம் செய்யப்படும். இதுதவிர வர்த்தகத்தை மேம்படுத்தவும் முதலீடுகளை அதிகரிக்கவும் விதிகள் தளர்த்தப்படுகின்றன.
இது மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஒப்பந்தமாகும். முதலாவது கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தம் (CECPA) கையெழுத்தானது. தற்போது இரண்டாவது ஒப்பந்தம் UAE உடன் நாளை கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி UAE செல்ல திட்டமிட்டு இருந்தார். அப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா மூன்றாம் அலை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிடப்பட்ட நிலையில், இந்தியா, UAE, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அடங்கிய புதிய குவாடில் முன்னேற்றம் ஏற்பட்டதால், இந்த ஒப்பந்தம் பிப்ரவரி மாதத்திற்கு மாற்றப்பட்டு நாளை கையெழுத்திடப்பட உள்ளன.
இந்தியா மற்றும் UAE இடையேயான வர்த்தகம் 2020-21 ஆம் ஆண்டு 43.3 பில்லியனை எட்டியது. இறக்குமதி 16.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 26.7 பில்லியன் டாலராகவும் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்ரிக்காவின் நுழைவு வாயிலாகவும் UAE உள்ளது. ஆப்ரிக்காவுக்கான ஏற்றுமதியில் பாதி UAE வழியாகவே செல்கிறது.
இந்த நிலையில் இறக்குமதி வரியில் 5 சதவீதத்தை ரத்து செய்வதன் மூலம் ஏற்றுமதி அதிகரிப்பது மட்டுமல்லாமல் இருநாடுகளும் பயன்பெறும். UAE நாட்டில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து UAE நாட்டிற்கு ஜவுளி, நகைகள், ரத்தினங்கள், தோல், காலணி மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இது தவிர இந்த ஆண்டுக்குள் மூன்று நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்தியா முயன்று வருகிறது. முதலாவது UAE உடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA), இங்கிலாந்து உடன் மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டாண்மை ஒப்பந்தம்(ETP), ஆஸ்திரேலியா உடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA) கையெழுத்திட இந்தியா முயன்று வருகிறது.
இதேபோல் கனடா உடன் CEPA, இஸ்ரேல் உடன் FTA, ரஷ்யா உடன் FTA, ஐரோப்பிய யூனியன் உடன் அடிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (BTIA) மற்றும் தென்னாப்பிக்கா உடன் FTA ஆகிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டமுடியும். சமீபத்தில் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், இங்கிலாந்து செயலர் அன்னே மேரி ட்ரெவல்யனுடன் சர்வதேச வர்த்தகத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.