இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு..!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

UNSC சீர்திருத்தம் குறித்த வருடாந்திர விவாதத்தில் ஐநா.வுக்கான பிரான்சின் துணை நிரந்தர பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் எஸ்டிவல் கூறுகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறினார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரத்தையும் செயல்திறனையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அதிக பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு தன்மையை பாதுகாக்க UNSC நிரந்தர உறுப்பினர்கள் 25 ஆக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் நிரந்தர உறுப்பினர்கள் உட்பட ஆப்ரிக்க நாடுகளின் வலுவான இருப்பை காண விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வார்ட் கூறுகையில், இங்கிலாந்து பாதுகாப்பு கவுன்சிலை நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரிவுகளில் விரிவுபடுத்துவதற்கு நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஜெர்மனி, ஐப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு புதிய நிரந்தர இடங்களை உருவாக்குவதையும், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர ஆப்ரிக்க பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார். நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்கலாம் என இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

15 நாடுகளை கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இந்த 5 நாடுகளில் சீனாவை தவிர மற்ற நாடுகள் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.