முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சிப்களை சந்தையில் வெளியிட்ட பாலிமேடெக்..!

ஐப்பானிய தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் உள்நாட்டு நிறுவனமான பாலிமேடெக், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆப்டோ-செமிகண்டக்டர்கள் மற்றும் மெமரி மாட்யூல்களை உற்பத்தி செய்து சந்தையில் வெளியிட தொடங்கியுள்ளது.

பாலிமேடெக் நிறுவனம் காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய ஆலையில் தற்போது ஒரு நாளைக்கு 400.000 சிப்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் ஒரு நாளைக்கு 1 மில்லியன் சிப்கள் அல்லது வருடத்திற்கு 300 மில்லியன் சிப்களை உற்பத்தி செய்யும் அதன் முழு திறனை அடைய நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

பாலிமேடெக் ஆப்டோ-செமிகண்டக்டர்களை HTCC (High Temperature Co-fired Ceramic substrates) மற்றும் COB (Chip on Board) இரண்டிலும் தயாரித்து வழங்குகிறது. ஸ்டேடியம் லைட்டிங், போர்ட் லைட்டிங், ஏர்போர்ட் லைட்டிங் மற்றும் பல உயர்-பவர் லைட்டிங் பயன்பாடுகளுக்கு COB பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோல் விமானம், மெட்ரோ ரயில்கள், சுரங்க நிலையங்கள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் போன்றவற்றில் HTCC பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த ஆப்டோ-செமிகண்டக்டர்கள் ஒளியமைப்பு, மருத்துவம் மற்றும் உணவு சுத்திகரிப்பு பயன்பாடுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

பாலிமேடெக் நிறுவனத்தின் தலைவர் ஈஸ்வர ராவ் நந்தம் கூறுகையில், 2029 ஆம் ஆண்டு உலகளாவிய குறைக்கடத்தி தொழில்துறை சந்தை 1,340 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும். இந்திய சந்தை 2026 ஆம் ஆண்டளவில் 64 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டளவில் ஆசியாவின் மிகப்பெரிய சிப் உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என ராவ் தெரிவித்துள்ளார். இதேபோல் குஜராத்தில் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே யூனிட்டை நிறுவ வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.