இலங்கையில் உணவு பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு.. அதிகரிக்கும் பணவீக்கம்..

தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் மூலம் அளவிடப்படும் இலங்கையின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 11.1 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2021 நவம்பர் மாதம் முதன்முறையாக பணவீக்கம் இரட்டை இலக்கத்தை தொட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக டிசம்பரிலும் இரட்டை இலக்கத்தை தொட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலை குறியீட்டின்படி, டிசம்பரில் உணவு பொருட்களின் விலை 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

உணவு அல்லாத பொருட்களின் விலை 1.3 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021 டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் உணவு துணை குறியீடு 21.5 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவு அல்லாத பொருட்களிம் துணை குறியீடு 7.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் இறக்குமதிக்கு இலங்கை அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்நிய செலாவணி குறைந்து வரும் நிலையில் இறக்குமதிக்கு தடை விதித்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மேலும் கச்சா இறக்குமதிக்கு டாலர் செலுத்த முடியாத நிலையில் அதன் ஒரே சுத்திகரிப்பு ஆலையை இலங்கை அரசு சமீபத்தில் மூடியது. மாநில எரிபொருள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்தாததால் எண்ணெய் விநியோகத்தை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இதனால் மின்சாரம் உற்பத்தி செய்யாததால் இலங்கையில் அடிக்கடி மின்வெட்டு நிலவி வருகிறது.இந்த நிலையில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை இந்தியாவிடம் கடன் கேட்ட நிலையில் 500 மில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இதுதவிர உணவு நெருக்கடியை தவிர்க்க மேலும் 1 பில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா அறிவித்துள்ளது. தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இலங்கையின் இந்த நிலைக்கு சீனாவின் கடன் வலையில் சிக்கியதே காரணம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.