ஆர்டிகிள் 370 நீக்கிய பிறகு முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் முதல் சர்வதேச உச்சிமாநாடு..!
ஆர்டிகிள் 370 நீக்கிய பிறகு முதல் சர்வதேச மாநாட்டை ஜம்மு காஷ்மீர் நடத்த உள்ளது. உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் செல்வாக்குமிக்க குழுவான ஜி20 உச்சி மாநாட்டை 2023ல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் நடத்த உள்ளது.
கடந்த 2019 ஆகஸ்டில் அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, ஐம்மு காஷ்மீரில் நடைபெறும் முதல் சர்வதேச உச்சிமாநாடு இதுவாகும். இதற்காக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஜி20க்கான இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1, 2022 முதல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா நடத்தும் என்றும், ஜி20 தலைவர்கள் மாநாட்டை 2023ல் முதன்முறையாக இந்தியா நடத்த உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் படி, 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவிற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் குழுவின் தலைவராக இருப்பார். 2014 ஆம் ஆண்டு முதல் ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் பிரரிநிதித்துவத்தை பிரதமர் மோடி வழிநடத்தி வருகிறார்.
1999 ஆம் ஆண்டு ஜி20 குழு தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியா உறுப்பினராக இருந்து வருகிறது. G20 குழு என்பது உலகின் முன்னணி 19 பொருளாதார நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளடக்கியது ஆகும். இந்த ஜி20 நாடுகள் உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும், உலகளாவிய மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
இந்த ஜி20 கூட்டமைப்பில், இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா, தென்னாப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் அல்தாப் தாக்கூர் கூறுகையில், இந்த நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஜி20 உச்சி மாநாடு யூனியன் பிரதேசத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமையான தருணம். வெளிநாடுகளில் நடந்து வந்த இந்த மாநாடு தற்போது ஜம்மு காஷ்மீரில் நடப்பது பெரிய விஷயம்.
Also Read: ராஞ்சி விமானநிலையத்தில் அசாதுதீன் ஓவைசியை வரவேற்ற போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்..
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் பிரதமர் மோடி உழைத்து வருகிறார், அதை நிருபித்துள்ளார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜி20 உச்சிமாநாடு இங்கு நடைபெறுவது யாரும் கனவிலும் நினைக்காத ஒன்று, பள்ளத்தாக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என அல்தாப் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த உச்சி மாநாடு 2023 ஜனவரியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.