2021 டிசம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை.. அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்..
2021 டிசம்பர் மாதம் ஏற்றுமதி 37 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் நிதயாண்டின் முதல் 9 மாதங்களில் ஏற்றுமதி 300 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
9 மாதத்தில் 300 பில்லியன் டாலரை தொடுவது இதுவே முதல் முறை. 2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி அதிகபட்ச அளவாக 37 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர சாதனை ஆகும். இது கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 27.22 பில்லியன் டாலரை விட 37 சதவீத வளர்ச்சி ஆகும்.
2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 37.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதியில் 80 சதவீதத்தில் உள்ள முதல் 10 பொருட்கள் கடந்த ஆண்டு டிசம்பரை விட 41 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த வளர்ச்சியின் மூலம் வருடாந்திர ஏற்றுமதி 400 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்ட முடியும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் நிதியாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் ஏற்றுமதி 299.75 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 2021 நிதியாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் காலகட்டத்தை விட 48.8 சதவீதம் அதிகம் ஆகும். 2020 9 மாத நிதியாண்டை விட 25.8 சதவீத வளர்ச்சி ஆகும். 2022 அக்டோபர் முதல் டிசம்பர் Q3 காலாண்டில் ஒட்டுமொத்தமாக 103 பில்லியன் மதிப்பிலான அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது மற்ற எந்த Q3 காலாண்டில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வளர்ச்சி ஆகும். ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்து வருவதாகவும், கிட்டதட்ட அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். துறை வாரியாக பார்க்கும் போது பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 37 சதவீதமும், எலக்ட்ரானிக்ஸ் 33 சதவீதமும், ஆயத்த ஆடைகள் 22 சதவீதமும், ரத்தினங்கள் மற்றும் நகைகள் 16 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன.
Also Read: அதிக எண்ணிக்கையிலான யூனிகார்ன்களுடன் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!
இந்த நிலையில் ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பதற்கு மற்ற நாடுகளுடன் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அமைச்சர் கூறினார். ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் முடிக்கப்பட உள்ளதாகவும், இங்கிலாந்து உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் இந்த மாதம் தொடங்கும் எனவும், UAE உடனான விரிவான வர்த்தக கூட்டாண்மை ஒப்பந்தம் முடியும் தருவாயில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Also Read: பொருளாதாரத்தில் ஐரோப்பிய நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்: CEBR கணிப்பு
மேலும் இஸ்ரேல் மற்றும் கனடா உடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வந்ததாகவும், மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் கீழ் இந்திய சீன வர்த்தக பற்றாக்குறை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
Also Read: தேயிலை மூலம் கடனை அடைக்கும் இலங்கை.. அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து தப்புமா..?