முதன்முறையாக ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்து சாதனை..! பிரதமர் மோடி வாழ்த்து..!
இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 400 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி இலக்கை 9 நாட்களுக்கு முன்னதாகவே எட்டியுள்ள நிலையில், வரலாறு எழுதப்பட்டுள்ளது என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை எட்டுவதில் நாட்டின் வெற்றியை பாராட்டிய மோடி, இந்தியாவின் ஆத்மநிர்பர் பாரத் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் என கூறினார். மோடி தனது ட்விட்டர் பதிவில், இந்தியா 400 பில்லியன் டாலர்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது மற்றும் முதன்முறையாக இந்த இலக்கை எட்டியுள்ளது.
இந்த வெற்றிக்காக விவசாயிகள், நெசவாளர்கள், MSMEகள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். நமது ஆத்மநிர்பர் பாரத் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் என மோடி ட்வீட் செய்துள்ளார்.
Also Read: இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு.. பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் இடையே கையெழுத்து..?
கடந்த 2020-2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 292 டாலர்களாக இருந்த நிலையில், 2021-2022 ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டில் 9 நாட்களுக்கு முன்னரே 37 சதவீதம் அதிகரித்து 400 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. 2018-2019 ஆம் நிதியாண்டில் இது 330 பில்லியன் டாலர்களாக இருந்தது.
சராசரியாக ஒவ்வொரு மாதமும் 33 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களும், ஒவ்வொரு நாளும் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பொறியியல் பொருட்கள், தோல், காபி, பிளாஸ்டிக், ஆயத்த ஆடைகள், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் கடல் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதியில் முக்கிய பங்களித்துள்ளன.
Also Read: ஒரே ஆண்டில் 10,000 கோடி மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்கள் ஏற்றுமதி செய்து சாதனை..!
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் கூறுகையில், 400 பில்லியன் டாலர்களை தாண்டியது குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏனெனில் ஏற்றுமதியாளர்கள் ஒரு வருடத்தில் 110 பில்லியன் டாலர்களுக்கு மேல் சேர்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.