உச்சநீதிமன்ற கருத்துக்கு எதிராக தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள், இராணுவ வீரர்கள் கடிதம்..

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், அதற்கு எதிராக 15 ஓய்வு பெற்ற நீதிபதிகள், 77 முன்னாள் அதிகாரிகள் மற்றும் 25 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

முகமது நபி தொடர்பாக நுபுர் சர்மா கூறிய கருத்துக்கள் சர்ச்சையானதை தொடர்ந்து நாடு முழுவதும் நுபுர் சர்மாவிற்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன. மேலும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பதிவிட்டதற்காக ராஜஸ்தான் உதய்பூரில் கன்ஹையா லால் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தன் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றகோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மாதம் 1 ஆம் தேதி அன்று அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியாகாந்த் மற்றும் ஜேபி பர்த்திவாலா அமர்வு விசாரித்தது.

அப்போது நுபுர் சர்மாவை விமர்சித்த நீதிபதிகள், நபிகள் நாயகம் குறித்த கருத்துக்கு நுபுர் சர்மா தொலைகாட்சி முன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியது. மேலும் அவரது தளர்வான நாக்கு முழு நாட்டையும் தீக்கரையாக்கிவிட்டது, நாட்டில் நடக்கும் கலவரத்திற்கு அவர் ஒருவரே பொறுப்பு.

நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா என கடுமையாக விமர்சித்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சில நாட்களுக்கு முன் சட்ட உரிமைகள் பாதுகாப்பு மையம் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில் நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் தொடர்பாக தலைமை நீதிபதியுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 15 முன்னாள் நீதிபதிகள், 77 முன்னாள் அதிகாரிகள் மற்றும் 25 முன்னாள் இராணுவ அதிகாரிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில், நீதித்துறை வரலாற்றில் இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை இதுவரை யாருமே முன்வைத்தது இல்லை. நீதிபதி சூரியகாந்த் பணி ஓய்வு பெறும் வரை உச்சநீதிமன்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

நுபுர் சர்மா வழக்கின் விசாரணையின்போது அவர் கூறிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டது. நீதித்துறை வரலாற்றில் இதுபோன்ற கருத்துக்கள் இடம்பெற்றதே இல்லை. இது ஜனநாயகத்தின் நீதி அமைப்பில் அழிக்க முடியாத கரும்புள்ளி. இது நாட்டின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.

எனவே இதில் நடவடிக்கை தேவை. உச்சநீதிமன்றத்தின் அவதானிப்புகள் நீதித்துறை உத்தரவின் ஒரு பகுதி அல்ல, ஆனால் அவற்றின் மூலம் நீதித்துறை உரிமை மற்றும் பாரபட்சமற்ற தன்மை பாதிக்கப்பட கூடாது. இத்தகைய கருத்துக்கள் நீதித்துறையின் வரம்பை மீறியவையாகும். இது நாட்டிலும் நாட்டிற்கு வெளியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுபுர் சர்மா நீதித்துறையை அணுக முயன்ற விஷயத்திலும், நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுவரை இல்லாத அளவிற்கு நீதி வழங்குவதற்கான அனைத்து நியதிகளையும் நீதிபதிகள் மீறியுள்ளனர். நுபுர் சர்மாவுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் கருத்துக்களால் இந்திய அரசியலமைப்பின் முகவுரை மற்றும் நீதித்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை, மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிதிஜ் வியாஸ், குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம்.சோனி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆர்.எஸ்.ரத்தோர் மற்றும் பிரசாந்த் அகர்வால், டெல்லி முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா உட்பட 15 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் முன்னாள் IAS அதிகாரிகள் ஆர்.எஸ்.கோபாலன் மற்றும் எஸ்.கிருஷ்ண குமார், முன்னாள் தூதர் நிரஞ்சன் தேசாய், முன்னாள் டி.ஜி.பி.க்கள் எஸ்.பி.வைத் மற்றும் பி.எல்.வோஹ்ரா, முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.சதுர்வேதி மற்றும் முன்னாள் ஏர் மார்ஷல் எஸ்.பி.சிங் உள்ளிட்ட 77 முன்னாள் அதிகாரிகள் மற்றும் 25 முன்னாள் இராணுவ வீரர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஜம்முவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி மன்றம் என்ற அமைப்பு மூலம் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.