இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு விற்ற முன்னாள் இராணுவ வீரர் கைது
லக்னோவில் உள்ள இராணுவ புலனாய்வு (MI) பிரிவு வழங்கிய தகவல்களையடுத்து உத்தரபிரதேசத்தின் பயங்கரவாத தடுப்பு அமைப்பு (ATS), ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சிக்னல்மேன் சௌரப் சர்மாவை கைது செய்தனர்.
சௌரப் சர்மா 2020 ஜூன் மாதம் உடல்நலனை காரணம் காட்டி ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
முன்னாள் படைவீரரான சௌரப் சர்மா 2016 முதல் கராச்சியை சேர்ந்த பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனத்திற்காக பணிபுரிந்து வந்ததாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது
சௌரப் சர்மா நாட்டுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து ஒரு மாதமாக சௌரப் சர்மாவை கண்காணித்து வந்த இராணுவ புலனாய்வு மற்றும் உத்திரபிரதேச தடுப்பு படை, ஹப்பூர் மாவட்டத்தில் பிஹுனியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்து சிக்னல்மேன் சௌரப் சர்மாவை கைது செய்தனர்.
சிக்னல்மேன் சௌரப் சர்மா பாகிஸ்தான் உளவுத்துறை உடனான தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவர் 2014 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் ஒரு பாகிஸ்தான் புலனாய்வு இயக்க நபருடன் தொடர்பு இருந்ததாக கூறினார்.
முகநூலில் அறிமுகமான அந்த பாகிஸ்தான் பெண் பாதுகாப்பு பத்திரிகையாளராக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பிறகு பணம் அளித்து முக்கியமான இராணுவ இரகசியங்களை பெற தொடங்கியுள்ளார். மேலும் சௌரப் சர்மா இந்த தகவல்களை ஆடியோ, டெக்ஸ்ட் மெசேஜுகள் மற்றும் புகைப்பட செய்திகள் மூலமாகவும், ஃபோன் கால்கள் மூலமாகவும் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் வாட்ஸப் மூலமாக தகவல்களை அனுப்பியுள்ளார். இதற்கு பலனாக சௌரப் சர்மாவிற்கு பலமுறை பாகிஸ்தானில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சௌரப் சர்மாவுக்கு எதிராக லக்னோ காவல் நிலையத்தில் IPC-யின் 120B, 123 ஆகிய பிரிவுகள், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (OSA) 3,4,5 மற்றும் 9 ஆம் பிரிவுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்(UAPA) 13வது பிரிவின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு, உ.பி. பயங்கரவாத தடுப்பு படை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.