ஜார்கண்ட் முதல்வரின் உதவியாளருக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்புள்ள கப்பலை பறிமுதல் செய்த அமலாக்க இயக்குனரகம்..

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆலோசகரான பங்கஜ் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் இயக்கப்பட்டு வந்த 30 கோடி மதிப்புள்ள கப்பலை அமலாக்க இயக்குனரகம் (ED) பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட எம்.பி.இன்ஃப்ராலிங்க்-3 கப்பலின் மதிப்பு 30 கோடி என ED தெரிவித்துள்ளது. தற்போது ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தாஹு யாதவ், பங்கஜ் மிஸ்ரா மற்றும் பிறருடன் இணைந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்கில் உள்ள சுகர்கர் காட் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் பாறைகளை இந்த கப்பல் கொண்டு சென்றுள்ளது. கப்பல் கைப்பற்றப்பட்ட நிலையில், சாஹிப்கஞ்சில் உள்ள முஃபாசில் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமலாக்கத்துறை இயக்குனரகத்தால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 2 கல் உடைக்கும் இயந்திரங்கள் மற்றும் கற்களை ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட பகுதி 37.5 மில்லியன் கன அடியாக இருக்கும் என அமலாக்கத்துறை கணித்துள்ளது. சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கலின் மதிப்பு சுமார் 45 கோடி இருக்கும் என ED மதிப்பிட்டுள்ளது.

முன்னதாக பங்கஜ் மிஸ்ரா, ராஞ்சி அருகே சட்டவிரோதமாக சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு ஜூலை 19 அன்று கைது செய்யப்பட்டார். ஜூலை 26 அன்று அவருக்கு மேலும் 6 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பங்கஜ் மிஸ்ரா கைது செய்யப்படுவதற்கு முன் ஜூலை 8 ஆம் தேதி ஜார்கண்டில் உள்ள பங்கஜ் மிஸ்ராவுக்கு தொடர்புடையதாக கூறப்படும் 18 இடங்களிலும், சாஹேப்கஞ்ச், பெர்ஹெய்ட், ராஜ்மஹால் மற்றும் மிர்சா சௌகி உள்ளிட்ட வணிக வளாகங்களிலிலும் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியது.

சோதனையில் வங்கி கணக்கில் இருந்து 11.8 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 5 சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் நொறுக்கும் இயந்திரங்கள் மற்றும் 5 கைத்துப்பாக்கி தோட்டாவையும் அமலாக்க இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது. மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத்துடன் தொடர்புடைய 100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தடத்தை கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.