எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை அழிக்க சீனா உருவாக்கி வரும் ஆயுதம்..?

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங் செயற்கை கோள்கள் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக இருப்பதால் அவற்றை அழிப்பதற்கு சீன ஆய்வாளர்கள் செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி வருவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிராக்கிங் அண்ட் டெலிகம்யூனிகேஷனின் ஆராய்ச்சியாளரான ரென் யுவான் ஜென், இந்த எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கும் ஆய்வுக்கு தலைமை தாங்குகிறார். இந்த குழுவில் பல சீன மூத்த ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். சில ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அழிக்க மென்மையான மற்றும் கடினமாக முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சீனாவின் உள்நாட்டு இதழான மாடர்ன் டிஃபென்ஸ் டெக்னாலஜிஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஸ்டார்லிங் என்பது உலகெங்கிலும் உள்ள வணிக மற்றும் இராணுவ பயனர்களுக்கு பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு திட்டமாகும். இதற்கான எலான் மஸ்கை சீனா உட்பட பலரும் புகழ்ந்தனர். ஆனால் கடந்த ஆண்டு ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கள் சீன விண்வெளி நிலையத்தை தாக்குவது போல் ஆபத்தான முறையில் அருகில் நெருங்கி சென்றது.

அமெரிக்க இராணுவ ட்ரோன்கள் மற்றும் திருட்டுத்தனமான போர் விமானங்கள் ஸ்டார்லிங்க் இணைப்புடன் அவற்றின் தரவு பரிமாற்ற வேகத்தை 100 மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்க முடியும் என ரென் கணித்துள்ளார். மேலும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்க அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதாவது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் அல்லது பூமியின் வளிமண்டலத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை கண்டறியும் உணர்திறன் கருவிகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்கின் இந்த சிக்கலான அமைப்பு சீன இராணுவத்தை புதிய செயற்கைகோள் எதிர்ப்பு திறன்களை உருவாக்க கட்டாயப்படுத்தும் என ரென் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு 3000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணை.. ஒப்பந்தம் கையெழுத்தானது..

எதிர்காலத்தில் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் இராணுவ பேலோடுகளை சுமந்து செல்ல வாய்ப்பு உள்ளதால், சீன இராணுவம் இந்த சிறிய செயற்கை கோள்களின் சூப்பர் ஷார்ப் படங்களை பெற, அசாதாரண அம்சங்களை அடையாளம் காண, தற்போதுள்ள விண்வெளி கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என ரென் தெரிவித்துள்ளார்.

ஒரு மில்லிமீட்டர் இடைவெளியில் செயற்கை கோள்களை புகைப்படம் எடுக்க கூடிய ஏராளமான தரை அடிப்படையிலான லேசர் இமேஜிங் சாதனங்களை சீனா உருவாக்கியுள்ள நிலையில், ஆப்டிகல் மற்றும் ரேடார் இமேஜிங்கிற்கு கூடுதலாக ஒவ்வொரு ஸ்டார்லிங்க் செயற்கை கோளிலிருந்தும் சிக்னல்களை இடைமறித்து சாத்தியமான அச்சுருத்தல்களை கண்டறிய வேண்டும் என ரென் கூறியுள்ளார்.

Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..

தகவலின்படி, சீனா பல மாற்று செயற்கை கோள் எதிர்ப்பு தொழிற்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இதில் நுண்ணலைகள் தகலல்தொடர்புகளை தடுக்கலாம் அல்லது மின்னணு கூறுகளை எரிக்கலாம். சீன விஞ்ஞானிகள் செயற்கை கோள்களை அழிப்பதற்கு லேசர்கள், பெரிய செயற்கைகோள்களை முடக்குவதற்கு அதிக எண்ணிக்கையில் ஏவப்படும் நானோ-சாட்கள் மற்றும் செயற்கைகோள் தகவல் தொடர்பு நெட்வொர்க்கை ஹேக் செய்ய சைபர் ஆயுதங்களை உருவாக்கியுள்ளது.

Also Read: உலகின் மிகப்பெரிய போர் விமானங்கள் கொள்முதல் திட்டத்தை பாதியாக குறைத்தது இந்தியா..

மேலும் ஸ்டார்லிங்க் போன்று உலக அளவில் இணைய சேவையை வழங்க சீனாவும் Xing Wang-StarNet என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் தொடர்ந்த நிலையில் உக்ரைனின் இணைய சேவை பாதிக்கப்பட்டது. இதனால் உக்ரைனுக்கு இணைய சேவை வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.