இந்தியாவிடமிருந்து மேலும் 500,000 டன் கோதுமை இறக்குமதி செய்ய உள்ள எகிப்து..?
உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதியாளராக எகிப்து, இந்தியாவிடம் இருந்து 500,000 டன் கோதுமை இறக்குமதி செய்ய உள்ளதாக கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா மோதலால் கோதுமை இறக்குமதி தடைப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிடம் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய எகிப்து முடிவு செய்துள்ளது.
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் நடைபெற்று வருவதால், எகிப்தின் முக்கிய கோதுமை ஏற்றுமதியாளராக இருந்த இரண்டு நாடுகளிடம் இருந்தும் கோதுமை தடைப்பட்டுள்ளது. இதனால் எகிப்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியாவிடம் கோதுமையை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவில் கடுமையான வெப்பத்தால் உற்பத்தி பாதிப்பு மற்றும் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் சனிக்கிழமை கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இருப்பினும் அதற்கு முன்பே ஆர்டர் கொடுக்கப்பட்ட 63,000 டன் கோதுமையில் 45,000 டன் கோதுமை எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது.
தற்போது இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்த தடை எகிப்து உடனான ஒப்பந்தத்திற்கு பொருந்தாது என எகிப்து வழங்கல் அமைச்சர் அலி மொசெல்ஹி கூறியுள்ளார். விநியோக பொருட்களுக்கான பொது ஆணையத்திற்கு அதன் டெண்டர் செயல்முறையை தவிர்த்து நாடுகள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கோதுமையை வாங்குவதற்கு எகிப்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Also Read: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1 மில்லியன் ஐபோன்களை ஏற்றுமதி செய்த ஆப்பிள் நிறுவனம்..
இதுதவிர கஜகஸ்தான், பிரான்ஸ், அர்ஜென்டினா போன்ற பிற நாடுகளுடனும் கோதுமை இறக்குமதி தொடர்பாக எகிப்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான கோதுமையும், அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான தாவர எண்ணெயும் கையிருப்பு உள்ளதாக எகிப்து பிரதமர் கூறியுள்ளார்.
Also Read: இந்திய கோதுமையில் அதிக புரத சத்து உள்ளது.. எகிப்து அதிகாரிகள் தகவல்..
நடப்பு உள்ளுர் கோதுமை அறுவடையை கொள்முதல் செய்வதை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதி வரை கோதுமை போதுமானதாக இருக்கும் என எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் இது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜி7 நாடுகள் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
Also Read: 1.8 லட்சம் கோடிக்கு மருந்து ஏற்றுமதி செய்து சாதனை படைத்த இந்தியா..?