பொருளாதார நெருக்கடி.. சீனாவிடமிருந்து விலகி இந்தியாவிடம் நெருக்கம் காட்டும் இலங்கை..

இலங்கை சீனாவிடம் வாங்கிய 4.5 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்தாததால் சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளது. இதனால் இலங்கை சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவுடன் நெருங்கி வருகிறது.

இலங்கை சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பிட்ச ரேட்டிங் மற்றும் மூடிஸ் இன்வெஸ்டர் ஆகியவை இலங்கையின் கடன் மதிப்பீட்டை குறைத்துள்ளன. இதனால் மேலும் கடன் வாங்க முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.

கடந்த மாதம் ஜனவரி 17 அன்று இலங்கை சென்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீடம், இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அதனை சமாளிக்கும் வகையில் கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் இந்த கோரிக்கையை சீனா நிராகரித்த நிலையில் இந்த தற்காலிக சிரமங்களை இலங்கை விரைவில் சமாளிக்கும் என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார். அந்நிய செலாவணி இல்லாததால் இலங்கை எரிபொருள் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இலங்கை அதற்கு பதிலாக தேயிலையை ஏற்றுமதி செய்து கடனை அடைத்து வருகிறது. சமீபத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இரண்டு நாள் பயணமாக் இந்தியா வந்த நிலையில், இந்தியா இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்கியது.

கடந்த வாரம் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை இந்தியாவிற்கான இலங்கை தூதர், இலங்கை எரிசக்தி அமைச்சரிடம் முறைப்படி வழங்கினார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபரில் கரிம உரத்தை இலங்கை அரசு சீனாவிடம் கொள்முதல் செய்தது. ஆனால் அதில் தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியா இருந்ததால் இலங்கை அந்த உரத்தை சீனாவிற்கு திருப்பி அனுப்பியது. இருப்பினும் அதற்கான தொகையை வழங்க வேண்டும் என சீனா இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் இலங்கை அதனை திருப்பி செலுத்த மறுத்து விட்டது.

பின்னர் நானோ நைட்ரஜன் திரவ உரத்தை ஏற்றுமதி செய்ய இலங்கை இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்த நிலையில் உரம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்தது. தற்போது மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளதால் இலங்கை சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.