மதமாற்ற தடை சட்டம் எதிரொலி.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுமாறு உலமா வாரியம் அறிவுறுத்தல்..

இரு மதத்தின் மணமக்களின் பெற்றோர் இல்லாமல் திருமணத்தை நடத்த கூடாது என்றும், தம்பதியரின் பெற்றோர் முன்னிலையில் மட்டுமே திருமணத்தை நடத்த வேண்டும் என அனைத்திந்திய உலமா வாரிய தலைவர் காஜிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி இயற்றப்பட்ட கட்டாய மதமாற்ற தடை சட்டமானது, ஒருவரை கவர்ந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க வழிவகை செய்கிறது. கட்டாய மதமாற்றம் தொடர்பாக ஜனவரி 31 வரை 57 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த சட்டத்தினால் அனைத்திந்திய உலமா வாரிய தலைவர் அனைத்து காஜிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆண் மற்றும் பெண் இருவரின் பெற்றோர் முன்னிலையில் மட்டுமே மதங்களுக்கு இடையேயான திருமணங்களை நடத்த வேண்டும்.

பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க கூடாது. திருமணத்தை பதிவு செய்யும் போது தேவையான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். ஆவணங்கள் அனைத்து ஏற்றுகொள்ளும் படியாக இருந்தால் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். திருமணத்தின் நோக்கம் மதமாற்றமாக இருக்க கூடாது என கூறியுள்ளார்.

மேலும் இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள் ரகசிய திருமணம் செய்துகொள்வதாக எங்களுக்கு புகார்கள் வருகின்றன. இதனால் தேவையில்லாத பதற்றம் ஏற்படுகிறது, திருமணத்திற்காக மதம் மாறுவது சரியல்ல. உத்தரவை மீறும் காஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தூர் நகரத்தின் காஜி இஷ்ரத் அலி கூறுகையில், மத்திய பிரதேச மத சுதந்திர சட்டம் அமலுக்கு வந்த பிறகு மதம் மாறிய திருமணங்களை பதிவு செய்யவில்லை. இஸ்லாத்தின் படி, வயது வந்த எந்த ஆணும் பெண்ணும் எந்த இரு சாட்சிகளின் முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோர்களின் சம்மதம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.