அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 கிமீ வரம்பை கொண்ட அக்னி 6 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO..

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா ஒஅணு ஆயுத திறன் கொண்ட 5,000 கிலோமீட்டர் தூரம் தாக்குதல் நடத்த கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை பரிசோதனை செய்தது. இது சீனாவின் முக்கிய நகரமான பெய்ஜிங், குவாங்சூ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்க முடியும்.

இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுக்குள் இந்தியா அக்னி 6 கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை 8,000 முதல் 10,000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது இந்தியா 700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணையும், 2,000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி 2 ஏவுகணையும், 3,500 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்குதல் நடத்தும் அக்னி 3 ஏவுகணையும், 4,000 கிலோமீட்டர் தூரம் வரை தாக்குதல் நடத்தும் அக்னி 4 ஏவுகணையும், 5,000 முதல் 8,000 கிலோமீட்டர் தூரம் வரை தாக்குதல் நடத்தும் அக்னி 5 ஏவுகணை சோதனை செய்யப்பட்டு தற்போது இந்திய இராணுவ வரிசையில் உள்ளன.

மேலும் அக்னி பிரைம் அல்லது அக்னி P ஏவுகணையானது தற்போது சோதனையில் உள்ளது. இந்த ஏவுகணை பற்றிய வேறு எந்த தகவலும் இல்லாததால், இவை இராணுவத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் அப்போதைய DRDO தலைவரான வி.கே.சரஸ்வத், அக்னி 6 தயாரிப்பில் இருப்பதாகவும், வன்பொருள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

அக்னி 6 அடுத்த மூன்று ஆண்டுகளில் கணினி உருவகப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப சோதனை நிலையை அடையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவின் அனைத்து நகரங்களையும் தாக்க முடியும். தற்போதைய தகவலின்படி, அக்னி 6 ஏவுகணை 10,000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது.

மேலும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், அக்னி 6 திட்டத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாது. ஏனெனில் இந்தியா தற்போது பல நாடுகளுடன் நல்ல உறவை பகிர்ந்து வருகிறது. பல இருதரப்பு மற்றும் பலதரப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வெளியுறவுக் கொள்கை புதிய உயரத்தில் உள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நாடு வளர்ச்சி அடையும் இந்த நேரத்தில் ஒவ்வொரு நட்பு நாடுகளையும், கூட்டாளி நாடுகளையம் குறிவைக்கக் கூடிய ஒரு ஏவுகணை இருப்பதை எந்தவொரு நாடும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாது என தெரிவித்துள்ளார்.

அக்னி 6 ஏவுகணை 10,000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், பல்வேறு சுயாதீன இலக்கு மறு நுழைவு வாகன திறனை கொண்டுள்ளது. அதாவது, ஏவுகணையால் எடுத்து செல்லப்படும் சுயாதீன வெடிமருந்துகள் பல இலக்குகளை தாக்கக் கூடியதாக இருக்கும். எதிரிகளை பீதியடைய செய்யும் இந்த எவுகணை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.